கோலாலம்பூர் – கடந்த 2006-ம் ஆண்டு சுங்கை பட்டாணியில் உள்ள கேளிக்கை விடுதி அருகே சீ காய்க் யாப் என்ற பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக, தொழிலதிபர் ஷாரில் ஜாபருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்தது.
ஷாரில் ஜாபர், ‘டத்தோ’ பட்டம் கொண்ட தொழிலதிபர் ஒருவரின் மகனாவார்.
கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி ராவுஸ் ஷாரிப், தனது தீர்ப்பில், இந்த வழக்கில் ஷாரில் மீதான குற்றத்தை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்திக் கண்டறிந்திருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்று கூறி, 2015-ம் ஆண்டு அலூர் ஸ்டார் உயர்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்தார்.
சீ காய்க் யாப் என்ற உத்தாரா மலேசியா பல்கலைக்கழகப் பட்டதாரிப் பெண்ணை, கடந்த 2006-ம் ஆண்டு, ஜனவரி 14-ம் தேதி, மாலையில் பாலியல் வல்லுறவு கொண்ட பின்பு, கொலை செய்து அருகில் இருந்த எஸ்டேட்டில் அவரது உடலை மறைத்து வைத்ததாக ஷாரில் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.