கோலாலம்பூர், மார்ச் 27- எதிர்க்கட்சியினர் கூறுவது போல் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் அச்சம் கொள்ளவில்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கலைக்க கால அவகாசம் இருக்கிறது என்று டத்தோஶ்ரீ நஸ்ரி தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் கலங்குவதால் தான் அவசரமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் தேசிய முன்னணி மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை செவ்வனே செய்து முடித்த பின் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது.
மேலும் ஏப்ரல் 28ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது என்று கூறிய நஸ்ரி, ஆனால் 13ஆவது பொதுத்தேர்தலைத் தள்ளிப் போடுவது வழக்கத்திற்கு மாறானது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
நெகிரி மாநில சட்டமன்றம் நேற்றோடு இயல்பாகவே தனது தவணைக் காலத்தை இழந்து விட்டது என்றால் அது தவறல்ல என்றார் நஸ்ரி.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் தேர்தலை நடத்த 60 நாட்கள் அவகாசம் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அந்த நாள் வந்தே தீரும். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் எதிர்க்கட்சியினர் கூறுவது போல் பிரதமர் அச்சத்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்தார்.