Home நாடு “மதமாற்றம் பெயரால் ‘குழந்தைகளைப் பறிக்கும்’ கொடுமைகளுக்கு முடிவு கண்ட கூட்டரசு நீதிமன்றம்” – டாக்டர் சுப்ரா...

“மதமாற்றம் பெயரால் ‘குழந்தைகளைப் பறிக்கும்’ கொடுமைகளுக்கு முடிவு கண்ட கூட்டரசு நீதிமன்றம்” – டாக்டர் சுப்ரா பாராட்டு

1268
0
SHARE
Ad

subra-dr-selliyal-featureகோலாலம்பூர் – இந்திரா காந்தியின் பிள்ளைகள் மதம் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த நீதிமன்றப் போராட்ட வழக்கில் கடந்த திங்கட்கிழமை ஜனவரி 29-ஆம் தேதி கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின் மூலம் மதம் மாற்றம் என்ற காரணத்தைக் காட்டி நடைபெறும் “குழந்தைகளைப் பறிக்கும்” சம்பவங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் (படம்) கருத்து தெரிவித்துள்ளார்.

“18-வயதுக்கும் குறைவான வயதுடைய பிள்ளைகளின் மதமாற்றத்திற்கு தாய்-தந்தை என பெற்றோர்கள் இருவரின் சம்மதமும் கட்டாயம் தேவை என கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் (பெடரல் கோர்ட்) அளித்துள்ள வரலாற்றுபூர்வ தீர்ப்பை மஇகா மகிழ்ச்சியுடன் பெரிதும் வரவேற்கிறது. சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘parent’ என்ற வார்த்தை “both parents” –  அதாவது தாய்-தந்தை என பெற்றோர்கள் இருவரையும் குறிக்கும் என்ற சட்டபூர்வ விளக்கத்தை தெளிவாக வழங்கியிருப்பதன் மூலம் ஒரு தலைப்பட்ச மதமாற்று விவகாரத்தில் இதுவரையில் நிலவி வந்த குழப்பங்களுக்கும், நிச்சயமற்ற தன்மைக்கும் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒரு முற்றுப் புள்ளி வைத்திருப்பதோடு, ஒருதலைப்பட்ச மதமாற்று விவகாரத்தில் பல குடும்பங்கள் இத்தனை ஆண்டுகளாய் எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கும் முடிவைக் கண்டுள்ளது” என இந்திரா காந்தி வழக்கு தொடர்பில் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

“முறைதவறி நடக்கும் கணவர்கள் மதம் மாற்றம் என்ற பெயரால் இந்திரா காந்தி போன்ற தாய்மார்களின் கரங்களில்  இருந்து அவர்களின் அன்புக் குழந்தைகளை பறித்துக் கொண்டு, தாயையும் குழந்தையையும் பிரிக்கும் கொடுமைகளுக்கும், அதன் காரணமாக தாய்மார்கள் எதிர்நோக்கும் விவரித்துச் சொல்ல முடியாத துயரங்களுக்கும் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு ஒரு தீர்வைக் கண்டுள்ளது. ஒருதலைப்பட்ச மதமாற்றம் விவகாரத்தில், அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 1976-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு சட்டத் திருத்தங்களும் ஒருசில பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கண்டிருக்கிறது. அந்த சட்டத் திருத்தங்கள் மற்றும் தற்போது கூட்டரசு நீதிமன்றம் வழங்கியிருக்கும் வரலாற்றுபூர்வ தீர்ப்பு ஆகிய இரண்டு அம்சங்களும் இணைந்து மதம் மாற்றம் என்ற காரணத்தைக் காட்டி “குழந்தைகளைப் பறிக்கும்” சம்பவங்கள் இனி பழைய வரலாறாக நம்மைக் கடந்து போகும் என உறுதியாக நம்பலாம்” என்றும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“அதே சமயத்தில் முஸ்லீம் அல்லாதாரின் சமய உரிமைகளை தொடர்ந்து பாதுகாக்கும் – நிலைநாட்டும் – மலேசிய நீதித் துறையின் பங்கும், கடப்பாடும் தொடர்ந்து வலுவாக நிலைநிறுத்தப்படும்” என்றும் அவர் தனது அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்தார்.