கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள் உலகப் புகழ் பெற்றவையாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப் பயணிகள் இந்தத் தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், கண்டு மகிழவும் மலேசியாவுக்கு இந்த காலகட்டத்தில் வருகை தருகின்றனர்.
இருப்பினும், பக்தர்களும், சுற்றுப் பயணிகளும், பார்வையாளர்களும் நேரடியாகக் கண்டால்தான் மலேசியாவின் தைப்பூச அனுபவத்தைப் பெற முடியும் என்ற நிலையை கடந்த சில ஆண்டுகளாக அஸ்ட்ரோ ஒளிபரப்புகள் வெற்றிகரமாக மாற்றி வந்திருக்கின்றன.
மலேசியாவின் பல நகர்களில் நடைபெறும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்களை தொலைக்காட்சி மற்றும் அஸ்ட்ரோ உலகம் இணையத் தளம் ஆகியவற்றின் வாயிலாக இடைவிடாது ஒளிபரப்பி, உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கொண்டு செல்லும் மாபெரும் பணியை அஸ்ட்ரோ இந்த ஆண்டும் தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.
டாக்டர் இராஜாமணி பெருமிதம்

“உலகம் முழுவதும் உள்ள இந்துக்களையும், தைப்பூச ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் ஒரே முனையில், நேரலையில் இணைக்கும் பணியை இந்த ஆண்டும் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறோம். இடைவிடாத 24 மணிநேர ஒளிபரப்பை அஸ்ட்ரோ இந்த ஆண்டும் மேற்கொண்டிருக்கிறது” என அஸ்ட்ரோ இந்தியப் பகுதிக்கான தலைவர் டாக்டர் இராஜாமணி செல்லியல் ஊடகத்துக்கு தொலைபேசி வழி வழங்கிய சிறப்புப் பேட்டியில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு அழகு தமிழில் வள்ளலார் இராமலிங்க அடிகளார் பாடி அருளிய “திருவருட்பா” பாடல்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஒளிபரப்புகளை அஸ்ட்ரோ வானவில், விண்மீன் எச்.டி, அஸ்ட்ரோ கோ, NJOI Now, ராகா மற்றும் அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் என பல முனைகளில் அஸ்ட்ரோ வழங்குகிறது” என்றும் இராஜாமணி மேலும் தெரிவித்தார்.
5 மலேசிய ஆலயங்கள் – இடைவிடாத 24 மணி நேர ஒளிபரப்பு
நேற்று செவ்வாய்க்கிழமை ஜனவரி 30-ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு தொடங்கிய இந்த ஒளிபரப்புகள் இடைவிடாது இன்று புதன்கிழமை மாலை 5.00 மணிவரை தொடர்ந்து நடத்தப்படும். உலகின் சுமார் 20 நாடுகளில் உள்ள இந்துக்களும், பார்வையாளர்களும் இந்த நேரலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈப்போ கல்லுமலை, பினாங்கு தண்ணீர் மலை, சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரணிய சுவாமி, கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், ஜோகூர்பாரு தண்டாயுதபாணி ஆலயம் ஆகிய ஐந்து ஆலயங்களிருந்து தைப்பூசக் கொண்டாட்டங்கள் நேரலையாக இடம் பெறும்.
இந்த ஆண்டு, கோலசிலாங்கூர் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேரடியாக வருகை தரவிருக்கிறார் என்பதால் இந்த முறை கோலசிலாங்கூர் தைப்பூசக் கொண்டாட்டங்களும் முக்கியத்துவம் பெறுகிறது.
அழகுத் தமிழ் நடையில் ஞானசம்பந்தன் வலம் வருகிறார்

அஸ்ட்ரோவின் அறிவிப்பாளர்கள் இந்த நேரலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க இடையிடையே தமிழறிஞர் முனைவர் கு.ஞானசம்பந்தனின் சுவையான, சரளமான அழகான தமிழ் நடையிலான விளக்கங்களும் நேர்காணல்ளாக இடம் பெறும் என்றும் இராஜாமணி விளக்கினார்.
அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தின் வாயிலாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் பிரபல பாடகர் டி.எல்.மகராஜன் கலந்து கொண்டு தகவல்களையும், விளக்கங்களையும் வழங்குவார்.
அஸ்ட்ரோவின் சேவைக்கு கின்னஸ் சாதனை

அஸ்ட்ரோவின் இந்த தைப்பூச நேரலை குறித்த நிகழ்ச்சி உலக சாதனை விருதுகளையும் பெற்றிருக்கிறது என்பதையும் இராஜாமணி தனது பேட்டியில் நினைவு கூர்ந்தார்.
55 மணி நேரம் 7 நிமிடம் இடைவிடாது ‘ஆஸ்ட்ரோ உலகம்’ இணையத் தளம் வழி 2016-ஆம் ஆண்டில் ஜனவரி 22 முதல் 25ஆம் தேதி வரை ஒளிபரப்பிய தைப்பூச நிகழ்ச்சிகளை உலகம் எங்கும் உள்ள 119 மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் முகநூல் பக்கங்களின் வழி பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் என்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், உலகிலேயே அதிக நேரம் நேரலையாக ஒளிபரப்பட்ட திருவிழா நிகழ்ச்சி என்ற அடிப்படையில் கின்னஸ் உலக சாதனை விருது கடந்த 23 மார்ச் 2016-ஆம் நாள் அஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது.
அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம்
அஸ்ட்ரோவின் இன்றைய தைப்பூச நேரலை நிகழ்ச்சிகளையும் தைப்பூச கொண்டாட்டம் குறித்த தகவல்களையும் அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மைக்ரோசைட் (microsite) வாயிலாக அவ்வப்போது பெற்று கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் இவ்வாண்டு தைப்பூச கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் காண்பதற்கு ஹேஷ்டேக் “VelVelVetrivel” என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம். இரசிகர்கள் தங்களுடைய தைப்பூச கொண்டாட்டத்தின் புகைப்படங்களை #VelVelVetrivel என்ற இணைப்பைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் (Facebook, Instagram, Twitter) பதிவேற்றம் செய்யலாம்.
மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my/ அகப்பக்கத்தை வலம் வருங்கள்.