கோலாலம்பூர் – அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 14-வது பொதுத் தேர்தல் தடை செய்யப்படலாம் அல்லது ஒத்தி வைக்கப்படலாம் என அவ்வப்போது கூறப்பட்டு வரும் ஆரூடங்களுக்கு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் துன் மகாதீர் பதிலளித்துள்ளார்.
“அவ்வாறு நேர்ந்தால் மக்கள் தங்களின் அதிருப்தையைக் காட்ட வீதிப் போராட்டத்தில் இறங்கலாம்” எனவும் மகாதீர் கூறியிருக்கிறார்.
ஆனாலும், பிரேசில், தென்கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியர்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். இந்த வெளிநாடுகளில் மக்கள் போராட்டத்தால் அழுத்தம் கொடுத்து ஊழல் புரிந்த தலைவர்களை பதவிகளில் இருந்து அகற்றியிருக்கிறார்கள் எனவும் துன் மகாதீர் கூறியிருக்கிறார்.
அவரது தலைமையில் இயங்கும் பெர்டானா தலைமைத்துவ அறவாரியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுடான கலந்துரையாடல் ஒன்றில் இன்று சனிக்கிழமை உரையாற்றியபோது மகாதீர் இவ்வாறு தெரிவித்தார்.
“பெர்சே தெரு ஆர்ப்பாட்டங்களின்போது மக்கள் அதிகமாக வெளியே வந்ததில்லை. நாம் ஆபத்து என அஞ்சி ஒதுங்கினால் நமக்கு பலன் எதுவும் விளையப் போவதில்லை. எனவே நாம் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்” எனவும் மகாதீர் தெரிவித்தார்.
“நஜிப் துன் ரசாக் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தால் நாம் தினமும் வெளியே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி அவசரச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டுவர போராடலாம். நாங்கள் எங்களால் இயன்றதைச் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனாலும் எங்களுக்கு மக்களின் ஆதரவு தேவை” என்றும் இளைஞர்களிடையே உரையாடும்போது குறிப்பிட்ட மகாதீர், “ஒருவேளை 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூடுதலானத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தால், அதற்குப் பின்னரும் பதவியைப் பிடித்துக் கொண்டு நீடிக்க நஜிப் முயற்சி செய்யமாட்டார்” என்றும் மகாதீர் நம்பிக்கை தெரிவித்தார்.