Home நாடு “சிகாமாட்டிலிருந்து தொகுதி மாற்றமா?” – டாக்டர் சுப்ரா மறுப்பு

“சிகாமாட்டிலிருந்து தொகுதி மாற்றமா?” – டாக்டர் சுப்ரா மறுப்பு

1095
0
SHARE
Ad

subra-dr-mic penang agm-25082017கோலாலம்பூர் – 2004-ஆம் ஆண்டு முதற்கொண்டு தற்காத்து வரும் ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மாறி எதிர்வரும் பொதுத்தேர்தலில் உலு சிலாங்கூர் தொகுதியில் போட்டியிடுவார் என பிரி மலேசியா டுடே வெளியிட்டிருக்கும் ஆரூடச் செய்தியை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் மறுத்துள்ளார்.

இன்றைய பிரி மலேசியா டுடே செய்தியில் மற்ற மஇகா தலைவர்கள் எங்கு போட்டியிடுவார்கள் என்பது குறித்து வெளியிடப்பட்ட ஆரூடங்கள் மற்றும் தான் சிகாமாட் தொகுதியிலிருந்து மாறி உலுசிலாங்கூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று வெளியிடப்பட்ட ஆரூடங்களும் அடிப்படையற்றவை, ஆதாரமற்றவை, கற்பனையானவை என்றும் அதில் அணுவளவு கூட உண்மையில்லை என்றும் டாக்டர் சுப்ரா பிரி தெரிவித்துள்ளார்.

பிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளத்திற்கு அனுப்பிய அறிக்கையில் டாக்டர் சுப்ரா இவ்வாறு தெரிவித்ததாக, அந்த இணையத் தளமே செய்தி வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

“சிகாமாட்டைப் பொறுத்தவரை அந்தத் தொகுதியில் மீண்டும் தேசிய முன்னணி வெல்வதற்காக நான் கடுமையாகப் பாடுபட்டு வருகிறேன். 2008 மற்றும் 2013 பொதுத் தேர்தல்களிலும் கூட சிகாமாட் கடுமையான போட்டிகளை எதிர்நோக்கியிருந்த தொகுதியாக இருந்தது. என்றாலும் நான் அந்த தொகுதியை விட்டு ஓடிவிடவில்லை. எத்தனை கடுமையாக போட்டியிருந்தாலும், யார் எதிர்த்து நின்றாலும் நான் சிகாமாட்டில் தொடர்ந்து போட்டியிட்டு வென்று வந்திருக்கிறேன்” என டாக்டர் சுப்ரா கூறியிருக்கிறார்.

ஏற்கனவே தெரிவித்ததைப் போன்று மஇகா சார்பிலான வேட்பாளர்களின் பட்டியல் தேசிய முன்னணித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்த டாக்டர் சுப்ரா, உரிய நேரத்தில் அந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள், அதுவரையில் இதுபோன்ற செய்திகள் வெறும் ஆரூடங்களாகவே இருக்கும் என்றும் தனது அறிக்கையில் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.