Home வணிகம்/தொழில் நுட்பம் திறன்பேசிகளில் இந்திய மொழிகள் – பிப்பிரவரி முதல் கட்டாயம்!

திறன்பேசிகளில் இந்திய மொழிகள் – பிப்பிரவரி முதல் கட்டாயம்!

1344
0
SHARE
Ad

sellinam-MobilePhone-IndianLanguages-திறன்பேசிகளில் இந்திய மொழிகள் சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தும் கட்டுப்பாட்டுத் தரம் ஒன்றை, 2016ஆம் ஆண்டு இந்திய அரசின் தரக் கட்டுப்பாட்டுச் செயலகம் வெளியிட்டது.

இது நடைமுறைக்கு வரவேண்டிய நாள் இருமுறை மாற்றப்பட்டு, இவ்வாண்டு  பிப்பிரவரி 23ஆம் நாள் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நாளுக்குப்பின் இந்தியாவில் விற்பனைக்கு வரும் திறன்பேசிகள், 22 அலுவல் மொழிகளையும் சரிவர வாசிக்கும் வகையில் அவற்றிற்கான எழுத்துருக்களைச் சேர்த்திருக்க வேண்டும்.

ஆபத்து அவசர வேளைகளில் எந்த அலுவல் மொழியிலும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படலாம். அவ்வாறு அனுப்பப்படும் செய்திகளைத் திறன்பேசிகள் முறையாகக் காட்ட வேண்டும்.  இதைச் சரிப்பார்ப்பதற்கு ஒரு தேர்வு முறையும் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாகச் சந்தைக்கு வரும் திறன்பேசிகள் இந்தத் தேர்வில் வெற்றிபெற வேண்டும். இல்லையேல் அவற்றை விற்பனைக்குக் கொண்டுவர இயலாது.

#TamilSchoolmychoice

சில மொழிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வரிவடிவங்களில் எழுதப்படுகின்றன. சிந்தி மொழி தேவநகரியிலும் அரபி எழுத்துகளிலும் எழுதப்படும் மொழி. வங்க மொழி எழுத்துகளில் எழுதப்பட்டுவந்த மணிப்புரி, அதன் இயல்பான வரிவடிவமான மித்தி-மாயாக் எழுத்துக்கு மாறி வருகிறது. சாந்தாளி மொழி தேவநகரியிலும் அதன் ஒல்-சிக்கி வரிவடிவத்திலும் எழுதப்பட்டு வருகிறது. எல்லா அலுவல் மொழிகளையும் எழுதப் பயன்படுத்தப்படும் எல்லா எழுத்துருக்களும், சரிவர அமைய இந்தத் தரக் கட்டுப்பாடு வழிவகுக்கிறது.

உள்ளிடு முறைகள் (விசைமுகங்கள் – keyboards)

திறன்பேசிகளில் இந்திய மொழிகள் அனைத்தையும் வாசிப்பதற்கான வசதி கட்டாயப்படுத்தப்     பட்டிருந்தாலும், உள்ளிடுமுறைகளின் கட்டாயம் அனைத்து மொழிகளுக்கும் விதிக்கப்படவில்லை.

இந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றோடு, ஏனைய அலுவல் மொழிகளுள் ஏதேனும் ஒன்றை உள்ளிடுவதற்கான வசதியும், சேர்க்கப்பட வேண்டும்.

இந்த மூன்றாம் மொழி, மாநிலத்திற்கு  மாநிலம் வேறுபடலாம். இந்த  எண்ணத்தில்தான் இக்கட்டுப்பாட்டை அமைத்திருக்கிறார்கள் போலும். எனினும், வெவ்வேறு மாநிலங்களுக்கு வெவேறு மொழிகளைச் சேர்ப்பதைவிட, எல்லா பேசிகளிலும் எல்லா மொழிகளையும் சேர்ப்பதே சிக்கனமானது.  இதையே உற்பத்தி நிறுவனங்களும் செய்கின்றன.

திறன்பேசிகளைத் தவிர, சிக்கனப் பேசிகளுக்கும் இந்தக் கட்டுப்பாடு உண்டு. இந்தப் பேசிகளில் சேமிப்பு இடவசதி குறைவாகவே இருக்கும். அனைத்து மொழி உள்ளிடு முறைகளையும் சேர்ப்பதற்கான வாய்ப்பு இவற்றில் இல்லாமல் போகலாம். இருப்பினும், எல்லா அலுவல் மொழிகளிலும் அனுப்பப்படும் செய்திகளை, இந்தச் சிக்கனப் பேசிகளும் சரிவரக் காட்டவேண்டும்.

செல்லினத்தின் பயன்பாடு

sellinam-promo-1024x500இணையத்தில் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில், தமிழே முதலிடம் வகிக்கிறது.

இந்தி, ஆங்கில உள்ளீடுகள் மட்டுமே கட்டாயம் ஆக்கப்பட்டாலும், இந்தப் பயன்பாட்டு எண்ணிக்கை ஒன்றே அனைத்துத் திறன்பேசிகளிலும் தமிழ் உள்ளீட்டை இயல்பாகவே சேர்க்க வைக்கும்!

அவ்வாறு அமையும் போது, செல்லினத்தின் பயன்பாடு எவ்வாறு அமையும்?

கூகுள் பிளே வழி வழங்கப்படும் செல்லினம் போன்ற உள்ளிடுமுறைகள், திறன்பேசிகளில் அமைந்திருக்கும் உள்ளிடுமுறைகளைவிட கூடுதலான வசதிகளை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால்தான் பயனர்கள் தரவிரக்கம் செய்வார்கள்.

செல்லினமும் அவ்வாறே வழங்கி வருகிறது!

செல்லினம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கருவிகளின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, பெரும்பாலானவற்றில் இயல்பாகவே தமிழ் விசைமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தாமல், செல்லினத்தைப் பயனர்கள் நாடுவது, செல்லினத்தின் கூடுதல் வசதிக்காகத்தான் என்பது தெளிவாகிறது.

மிகச் சரியான பரிந்துரைகள், எழுத்துப் பிழைத் திருத்தங்கள், பயன்பாட்டுக்கேற்ப அடுத்தச் சொல் பரிந்துரை – இவற்றைத் தவிர, தமிழின் சிறப்பைக் கூறும் திருக்குறளும், பழமொழிகளும் பரிந்துரைகளில் வந்து சேர்வது போன்ற வசதிகளைக் கொண்டுதான், பயனர்களைச் செல்லினம் ஈர்க்கின்றது.

தமிழின் பயன்பாட்டை எளிமையாக்கவும் தமிழில் எழுதுவதில் மகிழ்ச்சியைக் காண வைப்பதே செல்லினத்தின் நோக்கம். எனவே, இந்த வசதிகள், செல்லினத்தில் கூடிக் கொண்டே வரும்!

இயல்பான உள்ளிடுமுறைகள் தங்கள் கருவிகளில் இருந்தாலும், செல்லினத்தைப்  பயனர்கள் தொடர்ந்து தரவிறக்கம் செய்து வருவார்கள்.

ஆப்பிள் நிறுவனம் செல்லினத்தின் எழுத்துருவையும் உள்ளிடுமுறையையும் சேர்த்திருப்பதுபோலவே, எச். டி. சி நிறுவனமும் 2011-ஆம் ஆண்டுமுதல் சேர்த்து வருகின்றனர். எச். டி. சி திறன்பேசிகளில்,  தமிழ் மட்டுமின்றி எல்லா இந்திய மொழிகளின் எழுத்துருக்களும், உள்ளிடுமுறைகளும் செல்லினத்தின் அடிப்படையில் அமைந்தவையே!

எந்த விசைமுகத்தைப் பயன்படுத்தினாலும், தமிழின் பயன்பாடு கூட வேண்டும். கூடிக் கொண்டே இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை!

நன்றி: செல்லினம்