கோலாலம்பூர் – இன்று பிப்ரவரி 4-ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு இந்த ஆண்டுக்கான பிறந்த நாள் நிச்சயம் வித்தியாசமான, என்றும் நினைவு கூரத்தக்க பிறந்த நாள் கொண்டாட்டமாக அமைந்திருக்கும்.
காரணம், அவரது பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்னதாகத்தான் – பிப்ரவரி 1-ஆம் தேதி கொண்டாடப்பட்ட கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு மாமன்னர் அவர்களால் ‘டத்தோஸ்ரீ’ என்ற உயரிய விருது சரவணனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 31-ஆம் தேதி கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழாவின்போது, பத்துமலையில் காவடி எடுத்தார் சரவணன். ஆண்டுதோறும் தனது நேர்த்திக்கடனாக அவர் காவடி எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்த முறை அதிலும் ஒரு வித்தியாசம்!
ஆம், சந்திர கிரணம் நேரத்தின்போது ஆலயங்கள் சாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராகவும், அதனை மறுத்தும் தைப்பூசத்திற்கு முன்பு சில நாட்களாக சரவணன் தனது கருத்துகளை ஊடகங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் பதிவிட்டு வந்தார்.
சந்திர கிரணத்தின் போது ஆலயம் செல்வதும் தொழுவதும் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தனது வாதத்தை நிரூபிக்கும் வண்ணம், தைப்பூச தினத்தன்று சந்திர கிரணத்தின்போது பத்துமலையில் காவடி எடுத்தார் சரவணன்.
இப்படியாக, சில வித்தியாசமான அனுபவங்களுடன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி மகிழும் டத்தோஸ்ரீ சரவணனுக்கு, பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் துன் சம்பந்தன் சாலையில் உள்ள ஷிரிடி சாய் மையத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் அவரது ஆதரவாளர்களும், நண்பர்களும் தலைநகர் கிராண்ட் சீசன் தங்கும் விடுதியில் அவருக்காக சிறப்பு விருந்துபசரிப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.