கேமரன் மலை, தான் பிறந்து வளர்ந்த பூர்வீகமான இடம், இளம் வயதில் சுற்றித் திரிந்த இடம் என்பதால் மீண்டும் இங்கு வந்து தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியைத் தருவதாக கேவியஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்து பாரம்பரிய உடையில் தைப்பூசத் தினத்தன்று காலை 10.00 மணியளவில் தமது பாரம்பரியமான கோயிலை கேவியஸ் வந்தடைந்தபோது அவருடன் கேமரன்மலை மைபிபிபி தொகுதித் தலைவர் டத்தோ கண்ணா, தானா ராத்தா கிளைத் தலைவர் இளங்கோவன், மைபிபிபி உறுப்பினர்கள் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
கடந்த முறையும் இதே தைப்பூசத் திருநாளில் கேவியஸ் இதே ரிங்லட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கோயில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு தண்ணீர் பந்தலுக்கும் கேவியஸ் தனது குழுவினருடன் வருகையளித்தார். ரிங்லெட் தமிழ்ப்பள்ளியின் தண்ணீர் பந்தலுக்கும் வருகைதந்த அவர், அங்கு அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை குமாரி எட்டம்மாளுடன் அளவளாவியதோடு, கோயிலுக்கு வந்துள்ள பக்தர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைத்த அப்பள்ளி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினார்.


அதனைத் தொடர்ந்து, காவடி எடுத்த மக்களோடு மக்களாக இணைந்து முருகப்பெருமானை தரிசித்தார். சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார். தொடர்ந்து, ஆற்றங்கரையிலிருந்து ஒவ்வொன்றாக வருகை தந்த காவடிகளையும் கண்டு மகிழ்ந்த கேவியஸ், தமது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கேமரன்மலையின் தைப்பூசத் திருநாளின் நேரடிக் காணொளியைப் பதிவேற்றம் செய்தார்.
கோயிலுக்கு வருகை புரிந்திருந்த கேமரன்மலை மக்களைச் சந்தித்து அளவளாவியதோடு, பொதுமக்களுடன் ஆலயத்தில் வழங்கப்பட்ட மதிய உணவு அன்னதான விருந்திலும் கலந்து கொண்டார்.
தைப்பூசத் திருவிழாவிற்கு வருகையளித்த அந்நிய நாட்டுச் சுற்றுப்பயணிகள் சிலரையும் சந்தித்து அவர்களுக்கு தைப்பூசத் திருவிழாவின் மகத்துவத்தை எடுத்துக் கூறியதோடு, தைப்பூசத்தில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் முடி இறக்குதல், காவடி, பால்குடம் எடுப்பது மற்றும் கந்தப் பெருமானுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் ஆகியவை குறித்தும் அந்தச் சுற்றுப் பயணிகளுக்கு விளக்கம் அளித்தார்.
இதனிடையே, கேமரன்மலை தைப்பூசத்தில் மைபிபிபி இளைஞர் அணி ஏற்பாட்டிலான ‘இலவச கழிப்பறை சேவை’ வழங்கப்பட்டிருப்பதை அவர் பெரிதும் பாராட்டினார். இந்த சேவை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர தமது ஆதரவை அவர் வெளிப்படுத்தினார்.