Home நாடு தேர்தல் ’14 – சுங்கை சிப்புட் : மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது!

தேர்தல் ’14 – சுங்கை சிப்புட் : மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது!

893
0
SHARE
Ad
டான் லியான் ஹோ – சுங்கை சிப்புட் ஜாலோங் சட்டமன்ற தே.மு.வேட்பாளர்

சுங்கை சிப்புட் – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஊடகங்களிலும், அரசியல் கட்சிகளின் மத்தியிலும் மீண்டும் அடிக்கடி பேசப்படும் நாடாளுமன்றத் தொகுதியாக அண்மையக் காலங்களில் சுங்கை சிப்புட் மீண்டும் உருவெடுத்து வருகிறது.

சுங்கை சிப்புட் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகள், ஜாலோங் மற்றும் லிந்தாங் ஆகும். இதில் ஜாலோங் தொகுதியின் சட்டமன்றம் கெராக்கான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு கெராக்கான் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி டான் லியான் ஹோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என கெராக்கான் தேசியத் தலைவர் மா சியூ கியோங் அறிவித்திருக்கிறார்.

டான் லியான் ஹோ கடந்த முறை கிரிக் மற்றும் புக்கிட் கந்தாங் தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணையமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கடந்த 2013 பொதுத் தேர்தலில் ஜசெக 6,769 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற ஜாலோங் தொகுதியைக் கைப்பற்றுவது என்பது கெராக்கான் கட்சிக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை.

மற்றொரு சட்டமன்றத் தொகுதியான லிந்தாங் தொகுதியை 2013 பொதுத் தேர்தலில் அம்னோ 3,977 வாக்குகள் பெரும்பான்மையில் பாஸ் கட்சியைத் தோற்கடித்து வெற்றிகரமாகத் தற்காத்தது.

நாடாளுமன்ற வேட்பாளர் யார்?

டாக்டர் மைக்கல் ஜெயகுமார்

இதற்கிடையில், சுங்கை சிப்புட் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மஇகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இதுவரையில் எந்த வேட்பாளர் இங்கு போட்டியிடுவார் என்பது குறித்த எந்தவித அறிகுறியும் இதுவரை காணப்படவில்லை.

ஆனால், எதிர்க்கட்சிகளுக்கிடையில் சுங்கை சிப்புட் தொகுதியைப் பொறுத்தவரையில் கடும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பக்காத்தான் கூட்டணி, பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷலிஸ்ட் கட்சியைப் புறக்கணித்து எந்தத் தொகுதிகளையும் அந்தக் கட்சிக்கு இதுவரை ஒதுக்கவில்லை. ஆனால், 2008, 2013 பொதுத் தேர்தல்களில் சுங்கை சிப்புட் தொகுதியில் கடும் போட்டிகளுக்கிடையில் வெற்றி வாகை சூடிய டாக்டர் மைக்கல் ஜெயகுமார் பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்தவர்.

இதனால், பிஎஸ்எம் கட்சியோ சுயமாக சொந்த சின்னத்தில் சுங்கை சிப்புட் தொகுதியிலும், கேமரன் மலை உள்ளிட்ட மற்ற சில தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டது.

தொகுதி உடன்பாட்டின்படி சுங்கை சிப்புட் தொகுதி பிகேஆர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பிகேஆரும் சுங்கை சிப்புட் தொகுதியை மைக்கல் ஜெயகுமாருக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என அறிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதாகக் கேள்வி!

பிஎஸ்எம் கட்சியை இணைத்துக் கொள்ள பக்காத்தானுக்குத் தயக்கம் ஏன்?

ஆனால், பிஎஸ்எம் கட்சியை அதிகாரபூர்வமாக பக்காத்தான் கூட்டணியில் இணைப்பதற்கு துன் மகாதீர் ஏனோ தயக்கம் காட்டி வருகிறார். அவரது தயக்கத்திலும் சில நியாயங்கள் இருக்கின்றன.

சுங்கை சிப்புட்டில் மைக்கல் ஜெயகுமார் பிரபலமே தவிர, பிஎஸ்எம் கட்சிக்கு அதிகமான செல்வாக்கு இல்லை. எனவே, இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட பிஎஸ்எம் கட்சியை பக்காத்தான் கூட்டணியில் இணைப்பதால், தங்களுக்கு ஓர் அரசியல் சுமைதான் என்று பக்காத்தான் கூட்டணி கருதுகிறது.

இருந்தாலும், ஜெயகுமார் போன்ற சிறந்த வேட்பாளர்களை, பக்காத்தான் கூட்டணியின் கட்சிகளின் சின்னத்தின் கீழ் போட்டியிட பக்காத்தான் வரவேற்கிறது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் மைக்கல் ஜெயகுமார் பிகேஆர் கட்சியின் சின்னத்தில்தான் சுங்கை சிப்புட்டில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர்கள் சிலரை ஏற்றுக் கொள்ள பக்காத்தான் தயார் என்றாலும், அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் – எந்தெந்தத் தொகுதிகள் என்பதில்தான் சிக்கல்!

பிஎஸ்எம் – பக்காத்தான் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தால், ஜெயகுமார் சுங்கை சிப்புட் தொகுதியில் தனித்து, பிஎஸ்எம் கட்சியின் சார்பில் போட்டியிடும் சூழ்நிலை உருவாகும்.

அத்தகைய சூழல் மஇகா-தேசிய முன்னணி மீண்டும் சுங்கை சிப்புட்டைக் கைப்பற்றும் சாதகமான நிலைமையை உருவாக்கும்.

பிஎஸ்எம் சார்பில் ஜெயகுமார் போட்டியிட – பிகேஆர் தனியாக தனது வேட்பாளரை நிறுத்தும் சூழ்நிலை ஏற்படுமானால், தேசிய முன்னணி சுங்கை சிப்புட் தொகுதியைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

சரியான – பொருத்தமான – வலுவான – ஒரு வேட்பாளரை மஇகா தலைமைத்துவம் தேர்ந்தெடுத்தால்!

-இரா.முத்தரசன்