Home கலை உலகம் பாரதிராஜா ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மும்பை பறந்தார்

பாரதிராஜா ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மும்பை பறந்தார்

1150
0
SHARE
Ad

மும்பை – தமிழ்ப்பட இரசிகர்களைப் பொறுத்தவரை இன்றுவரை அவர்களுக்கு ஸ்ரீதேவி என்றதும் நினைவுக்கு வருவது அவரது ‘மயிலு’ என்ற கதாபாத்திரம்தான்.

‘மயிலு, மயிலு’ என இரசிகர்களை உருகவிட்ட அந்தக் கதாபாத்திரத்துக்குள் ஸ்ரீதேவியை ‘பதினாறு வயதினிலே’ படத்தின் மூலம் செதுக்கியவர் பாரதிராஜா.

அதுமட்டுமின்றி, பதினாறு வயதினிலே படத்தை இந்தியில் எடுத்து, அதில் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்து, ஸ்ரீதேவியின் இந்திப்படவுலகப் பிரவேசத்தையும் தொடக்கி வைத்தவர் பாரதிராஜா.

#TamilSchoolmychoice

இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவியின் அதிர்ச்சி தரும் மரணச் செய்தி கேட்டு உடனடியாக மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார் பாரதிராஜா. புறப்படும் முன் அவர் தமிழகத் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் ஸ்ரீதேவி குறித்த பழைய நினைவுகளை பாரதிராஜா பகிர்ந்து கொண்டார்.

“முதலில் ஸ்ரீதேவி எனது பதினாறு வயதினிலே இந்திப் பதிப்பில் நடிக்கத் தயங்கினார். வேண்டாம் என்று மறுத்தார். இருந்தாலும், நான் வற்புறுத்தவே, அந்தப் படத்தில் நடித்து, அந்தப் படப் பிரவேசத்தைக் கொண்டு அடுத்து வந்த இந்திப் படவுலக வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திப் படவுலகிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவரை பதினாறு வயதினிலே பட சமயத்தில் இயக்கிய நினைவுகளை நான் மறக்க முடியாது” என பாரதிராஜா கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் இருந்து யார் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வார்கள் என்பது இதுவரையில் உறுதியாகத் தெரியாத நிலையில் தான் உருவாக்கிய கதாநாயகியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முதல் ஆளாக மும்பை பறந்து சென்றுள்ளார் பாரதிராஜா.