Home நாடு பெக்கான் வருகை: சிங்கத்தின் குகையில் மகாதீர்!

பெக்கான் வருகை: சிங்கத்தின் குகையில் மகாதீர்!

1157
0
SHARE
Ad
துன் மகாதீர் – கோப்புப் படம்

பெக்கான் – இன்று புதன்கிழமை பிரதமர் நஜிப்பின் நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானுக்கு துன் மகாதீர் வருவதை முன்னிட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் காவல் துறை பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 100 காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கும் விதமாக, நாடு முழுவதும் நஜிப்புக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மகாதீர், தற்போது தனது பகாங் மாநில வருகையின் ஒரு பகுதியாக பெக்கான் தொகுதிக்கு வருகை தருகிறார்.

நேற்று பெந்தோங் நகருக்கு வருகை தந்த மகாதீரைக் காணப் பெருமளவில் மக்கள் திரண்டனர் என்றும் பக்காத்தான் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மகாதீரின் பெக்கான் வருகையை முன்னிட்டு அவருக்கு எதிராக காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

“நான் ஆயுதங்கள் எதனையும் பெக்கானுக்குள் கொண்டு வரவில்லை” என கிண்டலாக மகாதீர் இந்தப் புகார்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

எனினும் 13 நிபந்தனைகளோடு மகாதீரின் பெக்கான் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

மகாதீரின் நிகழ்ச்சிகள் பெக்கானில் இரத்து செய்யப்பட வேண்டும் இல்லையேல் நஜிப் மற்றும் அம்னோ ஆதரவாளர்களால் அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என பெக்கான் அம்னோவினர் எச்சரித்துள்ளனர்.

பெக்கானிலுள்ள சினி (Chini) என்ற இடத்திற்கு இன்று புதன்கிழமை பிற்பகல் வருகை தரும் மகாதீர் அதன் பின்னர் இங்குள்ள பூர்வ குடி மக்களின் வசிப்பிடங்களுக்கு நடைப்பயணம் மேற்கொள்வார் என்றும் இன்றிரவு சினியில் நடைபெறும் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற பக்காத்தான் தலைவர்களும் இந்த நிகழ்ச்சிகளில் மகாதீரோடு இணைந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.