மும்பை – (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நேர நிலவரம்)
4 வயது முதற்கொண்டு 54 வயது வரை ஒவ்வொரு காலகட்டத்திலும், தமிழ், தெலுங்கு, இந்தி என பல முனைகளிலும் இந்தியத் திரையுலகை தனது ஆதிக்கத்தால் ஆண்டு வந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அவரது குடும்பத்தினருக்கான மறக்க முடியாத இரவாக அமையப் போகிறது.
அகால மரணமடைந்த அவரது நல்லுடலை ஏந்திக் கொண்டு வரும் சிறப்பு தனி விமானம் இன்றிரவு இந்திய நேரப்படி 9.22 மணிக்கு (மலேசிய நேரம் நள்ளிரவு 12.00 மணி) மும்பை விமான நிலையத்தை வந்தடைகிறது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் இளைய சகோதரர் அனில் கபூர் ஸ்ரீதேவியின் நல்லுடலைப் பெற்றுக் கொள்வதற்கும், சோகத்தில் ஆழ்ந்திருக்கும் தனது அண்ணனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், மும்பை விமான நிலையம் வந்து காத்திருக்கிறார். அனில் கபூரின் மகள் சோனம் கபூரும் மும்பை விமான நிலையம் வந்தடைந்திருக்கிறார்.
ஸ்ரீதேவியின் நல்லுடலை ஏந்தி வரும் விமானத்தில் அவரது கணவர் போனி கபூர், போனி கபூரின் சகோதரர் சஞ்சய் கபூர், போனி கபூரின் முதல் மனைவிக்குப் பிறந்த அவரது மகனும் நடிகருமான அர்ஜூன் கபூர் ஆகியோரும் உடன் வருகின்றனர்.
இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரும், ஸ்ரீதேவியின் குடும்ப நண்பருமான அனில் அம்பானியும் மும்பை விமான நிலையத்தில் தற்போது காத்திருக்கிறார்.
ஸ்ரீதேவியின் நல்லுடலை ஏந்தி வருவதற்காக ஒரு சிறப்பு மருத்துவ வாகனமும் (ஆம்புலன்ஸ்) மும்பை விமான நிலையத்தில் காத்திருக்கிறது.
ஸ்ரீதேவியின் மரண விசாரணை தொடர்பான வழக்கு முடிவடைந்து விட்டதாகக் கூறியிருக்கும் துபாய் அரசாங்க அதிகாரிகள் ஸ்ரீதேவியின் நல்லுடலை மும்பை அனுப்ப அனுமதி அளித்தனர்.
நாளை பிற்பகல் 3.30 மணி முதல் 5.00 மணிவரை அவரது இறுதிச் சடங்குகள் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரத்தின் மூலம் அவரது உடல் எரியூட்டப்படாது என்றும் மாறாக பாரம்பரிய முறைப்படி அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாளை புதன்கிழமை காலை 9.30 மணி முதற்கொண்டு பிற்பகல் 12.30 மணிவரை ஸ்ரீதேவியின் நல்லுடல் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
அதன் பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
தமிழ் நாட்டிலிருந்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஹன்சிகா, நடிகர் நாசர் ஆகியோர் ஸ்ரீதேவிக்கு இறுதி மரியாதை செலுத்த மும்பை சென்றடைந்துள்ளனர்.