Home நாடு பினாங்கு சுரங்கப் பாதை விவகாரத்தில் அம்னோவின் அப்துல் அசிஸ் சம்பந்தப்பட்டாரா?

பினாங்கு சுரங்கப் பாதை விவகாரத்தில் அம்னோவின் அப்துல் அசிஸ் சம்பந்தப்பட்டாரா?

1079
0
SHARE
Ad
டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம்

புத்ரா ஜெயா – பினாங்கு சுரங்கப் பாதை விவகாரத்தில் விசாரணையை மேற்கொண்டிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட வணிகர் 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரீகர் வாரியத்தின் தலைவரும் அம்னோ பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹீமும் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

அப்துல் அசிசுக்கு 3 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகவும், அதற்கான ஆலோசனை சேவைகளை அவர் முறைப்படி வழங்காத காரணத்தால் அவருக்கு வழக்கறிஞர் மூலம் கொன்சோர்ட்டியம் செனித் கொன்ஸ்ட்ரக்‌ஷன் சென்டிரியான் பெர்ஹாட் (Consortium Zenith Construction Sdn Bhd) என்ற நிறுவனம் சட்ட நடவடிக்கைக்கான கடிதத்தை அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்தகைய கடிதம் கிடைக்கப்பட்டதை அப்துல் அசிசும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் செனித் நிறுவனத்துடன் தனக்கு எந்தவித தொடர்புகளும் இருந்ததில்லை என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் 2 நபர்களுக்கு 22 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருப்பது குறித்து பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் அதிர்ச்சி தெரிவித்திருப்பதோடு, அப்துல் அசிஸ் மீது ஏன் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை முடுக்கி விடவில்லை – அவரை ஏன் வாக்குமூலம் வழங்க அழைக்கவில்லை எனக் கேள்வி தொடுத்திருக்கிறார்

ஊழல் தடுப்பு ஆணையத்தில் துணை ஆணையர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அப்துல் அசிசை விசாரணைக்கு அழைக்க இப்போதைக்கு தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்.