புத்ரா ஜெயா – நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் மலேசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் விவகாரம் தொடர்பில் அம்னோ மற்றும் மசீச அமைச்சர்களுக்கு இடையே அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரோபர்ட் குவோக்குக்கு எதிராகக் கடுமையான கருத்துகள் கூறிய சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் மற்றும் மசீச, கெராக்கான் அமைச்சர்களுக்கிடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்றதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன என மலேசியாகினி இணைய ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், துணைத் தலைவர் வீ கா சியோங், தலைமைச் செயலாளர் ஓங் கா சுவான், கெராக்கான் தலைவர் மா சியூ கியோங் ஆகியோர் நஸ்ரியின் பேச்சு குறித்து அமைச்சரவையில் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.
இதற்கிடையில் அமைச்சரவைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த லியோவ் தியோங் லாய் அமைச்சரவை, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியில் ரோபர்ட் குவோக்கின் பங்களிப்பு குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்டது என்று மட்டும் கூறியிருக்கிறார்.
ஜசெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான இணைய ஊடகங்களுக்கும் அரசாங்கத்தை வீழ்த்த ரோபர்ட் குவோக் நிதியுதவி அளித்தார் என மலேசியா டுடே இணைய ஊடகம் வெளியிட்ட செய்திகளைத் தொடர்ந்து சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன.
ரோபர்ட் குவோக்கிற்கு ஆதரவாக பிரதமர் நஜிப்பின் இளைய சகோதரர் நசிர் ரசாக்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்