புதுடில்லி – (மலேசிய நேரம் மாலை 5.30 மணி நிலவரம்) புதுடில்லியிலுள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்திய நேரப்படி இன்று வியாழக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 2.00 மணியளவில் கார்த்தி சிதம்பரம் கொண்டுவரப்பட்டு, அவருக்கு தடுப்புக் காவல் வழங்குவது மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டு புதுடில்லி கொண்டு செல்லப்பட்ட கார்த்தியை ஒரு நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து சிபிஐ தடுப்புக் காவல் மையத்திற்கு கார்த்தி கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் கூறியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலையில்தான் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரது உடல் நலத்தில் எந்தவிதப் பிரச்சனைகளும் இல்லை என மருத்துவமனை உறுதிப் படுத்தியிருக்கிறது.
இன்று பிற்பகல் கார்த்தி நீதிமன்றம் கொண்டுவரப்பட்டபோது, அவரது தந்தையும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், அவரது தாயார் நளினி சிதம்பரம் ஆகியோரும் நீதிமன்றம் வந்திருந்தனர்.
கார்த்தி சிதம்பரம் சார்பாக திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள் குழு ஒன்று வாதாடி வருகின்றது. சிபிஐ சார்பில் கூடுதல் அரசு வழக்குரைஞர் (அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல்) பிரதிநிதித்து வழக்காடி வருகிறார்.
கார்த்தி சிதம்பரத்தைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ கூடுதல் கால அவகாசம் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறது.