கோலாலம்பூர் – இந்தியாவில் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் முதலீடு செய்த தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் ஏராளமான கடன்கள், இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை திவால் ஆனதாக அறிவித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மலேசியாவின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராகக் கருதப்படும் ஆனந்த கிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை எதிர்நோக்கக் கூடும் என வணிக ஊடகங்கள் கணித்திருக்கின்றன.
ஆனந்த கிருஷ்ணனின் வணிக வரலாற்றில் இத்தனை பெரிய இழப்பையும் பின்னடைவையும் அவர் சந்தித்திருப்பது இதுதான் முதல் தடவை என்றும் கருதப்படுகிறது.
ஏர்செல் நிறுவனத்தின் 74 விழுக்காடு பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் கொம்யுனிகேஷன்ஸ் கொண்டிருக்கிறது. மேக்சிஸ் நிறுவனத்தில் ஆனந்த கிருஷ்ணன் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கிறார்.
ஏர்செல் நிறுவனத்தை மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைக்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும், பல்வேறு சட்ட இடையூறுகளால் அந்த இணைப்பு நடவடிக்கையை செயல்படுத்த முடியவில்லை. ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்ஸ் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனமாகும்.
இந்நிலையில், ஏர்செல் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் அந்த சேவையைப் பயன்படுத்தும் பல வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஏர்செல் ஏறத்தாழ 155 பில்லியன் ரூபாய் (2.38 பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் தொல்லையில் சிக்கித் தத்தளிக்கிறது. அந்தக் கடன்களை மறுசீரமைப்பு செய்யும் முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏர்செல் திவால் ஆகும் நிலைமையை அறிவித்திருக்கிறது.
ஏர்செல் போன்ற நிறுவனங்களின் தோல்விக்கும், இழப்புக்கும், ரிலையன்ஸ் ஜியோ என்ற முகேஷ் அம்பானியின் தொலைத் தொடர்பு நிறுவனம் மேற்கொண்ட அபரிதமான விலைக் குறைப்புகள், தீவிரமான சந்தை விரிவாக்கங்கள், அதிரடி சலுகைகள் ஆகியவையே காரணம் என வணிகப் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.