கோலாலம்பூர் – சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், வலது தோள் பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை மற்றும் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனை ஆகியவற்றில் தொடர் சிகிச்சைகள் பெற்று வருகின்றார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு, அன்வாரின் தோள் பட்டை சிகிச்சையின் போது, அவருக்கு செலுத்தப்பட்ட ஸ்டீராய்ட்டு மருந்து எதிராகச் செயல்பட்டு, இதயத் துடிப்பைக் குறைத்தது.
இதனையடுத்து, அவர் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவில் (சிசியு) அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் ஃபாஹ்மி “ஃபாட்சில் கூறுகையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நாள்பட்ட தோள்பட்டை வலி காரணமாக அன்வாருக்கு கடந்த சனிக்கிழமை ஸ்டீராய்டு மருந்து ஊசி போடப்பட்டது. இதனால் அவரது இதயத்துடிப்பு குறைந்து, கவலையடிக்கக் கூடிய வகையில் இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
எனினும், அன்வார் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதாகவும் ஃபாஹ்மி குறிப்பிட்டிருக்கிறார்.