
தானா ராத்தா – இன்று செவ்வாய்க்கிழமை காலை (6 மார்ச் 2018) கேமரன் மலைக்கு வருகை தந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், “கேமரன் மலை தொகுதி மஇகாவுக்குத்தான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம். தேசிய முன்னணியின் அதிகாரபூர்வப் பட்டியல் வெளியிடப்படும்போது, பிரதமரும் அவ்வாறே அறிவிப்பார். மஇகாவின் வேட்பாளர் எனவே மஇகாவினர் அனைவரும் தைரியத்தோடும், நம்பிக்கையோடும் கேமரன் மலையில் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வாருங்கள்” என கோரிக்கை விடுத்தார்.
அதே வேளையில் கேமரன் மலையில் மஇகா தோல்வியடைந்தால் அது மஇகாவின் சரித்திரத்தில் ஒரு பலத்த அடியாகக் கருதப்படும் என்றும் எச்சரித்த அவர் எனவே, மஇகாவினர் தங்களின் கருத்து வேறுபாடுகளை, வேற்றுமைகளை அடுத்த ஓரிரு மாதங்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டு, கேமரன் மலை நாடாளுமன்றத்தைக் கட்சி தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
“அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டுப் பணியாற்றினால்தான் நாம் வெற்றி பெற முடியும். இங்கு வெற்றி பெறுவதுதான் நமக்குக் கௌரவம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
“கேமரன் மலை மஇகாவுக்குத்தான் என்பதில் நாங்கள் தெளிவுடன் இருக்கிறோம். அந்தத் தெளிவோடு பிரதமரிடமும் அடிக்கடி நாங்கள் வலியுறுத்தி விட்டோம். எனவே, இங்குள்ள மக்களும், மஇகாவினரும் அதே தெளிவோடு பணியாற்ற வேண்டும்” என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
“கேமரன் மலை அம்னோ தலைவரிடம் நான் பேசியிருக்கிறேன். இங்குள்ள மலாய் வாக்காளர்களையும், பூர்வ குடி வாக்காளர்களையும் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என அவர் உறுதி கூறியிருக்கிறார். அதே வேளையில், மசீச, கெராக்கான் தலைவர்களிடமும் கலந்து பேசியிருக்கிறேன். அவர்களும் சீன வாக்காளர்களிடையே முன்பைவிடக் கூடுதலான ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் இருப்பது இயல்புதான். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் அனைவரும் தெளிவான மனநிலையோடு கேமரன் மலையில் பாடுபட வேண்டும்” எனவும் டாக்டர் சுப்ரா வலியுறுத்தினார்.
கேமரன் மலை தேசிய முன்னணி அலுவலகம் திறப்பு
கேமரன் மலையில் மஇகா – தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரத்தை மேலும் தீவிரமாக முடுக்கிவிடவும், நடைபெற்று வரும் தேர்தல் நடவடிக்கைகளைப் பார்வையிடவும் டாக்டர் சுப்ரா கேமரன் மலைக்கு இன்று குறுகிய கால வருகை மேற்கொண்டார்.
இன்று ஒரு நாள் முழுக்க கேமரன் மலையில் சந்திப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிரதமர் தன்னைச் சந்திக்க வரும்படி அழைப்பு விடுத்திருப்பதால், தனது கேமரன் மலை வருகை சுருக்கிக் கொண்டு கோலாலம்பூர் திரும்புவதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.
கேமரன் மலை, தானா ராத்தாவிலுள்ள தேசிய முன்னணி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தையும் டாக்டர் சுப்ரா இன்று காலை திறந்து வைத்தார்.
கேமரன் மலையில் இரவு பகல் பாராமல், தூங்காமல் உழைத்து வரும் மஇகா கேமரன் மலைக்கான ஒருங்கிணைப்பாளரும், மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவருமான டத்தோ சிவராஜ் சந்திரனின் பணிகளையும் டாக்டர் சுப்ரா பாராட்டினார்.
கோல தெர்லா தமிழ்ப் பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பொது மண்டபத்தின் கட்டுமானத்திற்காக 3 இலட்சம் ரிங்கிட் நிதி உதவியையும் டாக்டர் சுப்ரா பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.
கேமரன் மலையிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்திற்கான நிர்மாணிப்புக்காகவும் டாக்டர் சுப்ரா 5 இலட்சம் ரிங்கிட்டை இன்றைய நிகழ்ச்சியில் அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.