கோலாலம்பூர் – 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் உலகமே தன்னை ‘திருடன்’ என அழைத்தாலும் கூட, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதற்காக வெட்கப்படுவதே இல்லை என பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின் கூறியிருக்கிறார்.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் நிறைய மலேசியர்கள், அந்நாடுகளின் குடிநுழைவு மையங்களில் தங்களது பிரதமரால், அவமானத்தைச் சந்திக்கின்றனர் என்றும் மொகிதின் குறிப்பிட்டிருக்கிறார்.
மலேசிய கடப்பிதழ்களை வாங்கிப் பார்க்கும் குடிநுழைவு அதிகாரிகள், “இது மலேசியாவைச் சேர்ந்த கடப்பிதழா?” எனக் கேட்பதாகவும் மொகிதின் தெரிவித்திருக்கிறார்.
“என்ன செய்வது, நமது கடப்பிதழ் மலேசியாவைச் சேர்ந்தது அல்லவா? எனவே நாமும் ‘ஆமாம்’ என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது” என்றும் மொகிதின் தெரிவித்திருக்கிறார்.
மேலும், குடிநுழைவு அதிகாரிகள், “உங்களது பிரதமரை எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு திருடன்” என்று கூறுவதாகவும் மொகிதின் குறிப்பிட்டிருக்கிறார்.
“அது போன்ற சூழ்நிலைகளில் நாம் மிகவும் அவமானப்படுகின்றோம். ஆனால் நஜிப் எந்த ஒரு வெட்கமும் இன்றி எதையும் சட்டை செய்யாமல் இருக்கிறார்” என்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பினாங்கில் நடந்த கூட்டம் ஒன்றில் மொகிதின் தெரிவித்திருக்கிறார்.