கோலாலம்பூர் – கடந்த பல ஆண்டுகளாக மலேசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ஆனந்த கிருஷ்ணன் தற்போது 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
7.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட ஆனந்த கிருஷ்ணனின் வணிக சாம்ராஜ்யம் அண்மையில் இந்தியாவில் அவர் மேற்கொண்ட முதலீடுகளின் காரணமாக பலத்த சரிவை எதிர்நோக்கியது.
ஏர்செல் நிறுவனத்தை வாங்கியது முதல் அந்த நிறுவனத்தை வணிக ரீதியில் முன்னேற்றக் கடுமையாகப் பாடுபட்டாலும், இறுதியில் ஆனந்த கிருஷ்ணன் தோல்வியையே சந்தித்தார். பல வழக்குகளையும், ஏன் கைது நடவடிக்கைகளைக் கூட எதிர்நோக்கினார்.
தற்போது ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனந்த கிருஷ்ணனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர், ஹோங் லியோங் வங்கிக் குழுமம் மற்றும் பல்வேறு வணிகங்களைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் குவெக் லெங் சான் ஆவார்.
தொடர்ந்து முதலிடத்தை ரோபர்ட் குவோக் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். அண்மையில் இவர் சில சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்.