Home நாடு பினாங்கு பக்காத்தான் தொகுதிகள் உடன்பாடு அறிவிப்பு

பினாங்கு பக்காத்தான் தொகுதிகள் உடன்பாடு அறிவிப்பு

1112
0
SHARE
Ad
ஞாயிற்றுக்கிழமை பினாங்கில் நடைபெற்ற பக்காத்தான் கூட்டத்தில் தலைவர்கள்

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி உடன்பாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஜசெகவின் பினாங்கு அரசாங்கத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நேற்று எஸ்பிலேனேட் என்ற இடத்தில் நடைபெற்றபோது பக்காத்தான் தலைவர்கள் அங்கு குழுமினர். ஆயிரக்கணக்கான மக்களும் பக்காத்தான் தலைவர்களின் உரைகளைக் கேட்கத் திரண்டனர்.

மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 2013 பொதுத் தேர்தலில் வென்ற 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜசெக மீண்டும் போட்டியிடுகிறது. அவை பின்வருமாறு:

  1. சுங்கை புயு
  2. பாகான் ஜெர்மால்
  3. பாகான் டாலாம்
  4. பெராப்பிட்
  5. பாடாங் லாலாங்
  6. பிறை
  7. ஜாவி
  8. தஞ்சோங் பூங்கா
  9. ஆயர் பூத்தே
  10. புலாவ் திக்குஸ்
  11. பாடாங் கோத்தா
  12. கொம்தார்
  13. பெங்காலான் கோத்தா
  14. டத்தோ கிராமாட்
  15. சுங்கை பினாங்
  16. பத்து லஞ்சாங்
  17. ஸ்ரீ டெலிமா
  18. ஆயர் ஈத்தாம்
  19. பாயா தெருபோங்

ஜசெகவோடு மோதும் மஇகா

#TamilSchoolmychoice

மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் பாகான் டாலாம், பிறை இரண்டும் வழக்கமாக மஇகா போட்டியிடும் தொகுதிகளாகும். கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் மஇகா இந்த இரண்டு தொகுதிகளிலும் தோல்வியையே சந்தித்தது.

மீண்டும் இதே தொகுதிகள் தேசிய முன்னணியின் தொகுதிப் பங்கீட்டின் கீழ் மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டால், இந்த முறையும் வலிமை வாய்ந்த ஜசெகவோடு மஇகா மோதும் நிலைமை ஏற்படும்.

பிகேஆர் போட்டியிடப் போகும் தொகுதிகள்

பிகேஆர் இந்த முறை 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் மூன்றை பெர்சாத்து கட்சிக்கு பிகேஆர் விட்டுக் கொடுக்கிறது.

பிகேஆர் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:

  1. பினாங் துங்கால்
  2. தெலுக் ஆயர் தாவார்
  3. செபராங் ஜெயா
  4. பெனாந்தி
  5. மாச்சாங் பூபுக்
  6. புக்கிட் தெங்கா
  7. புக்கிட் தம்பூன்
  8. சுங்கை பாக்காப்
  9. சுங்கை ஆச்சே
  10. கெபூன் பூங்கா
  11. பத்து உபான்
  12. பந்தாய் ஜெரஜாக்
  13. பத்து மாவுங்
  14. புலாவ் பெத்தோங்

பெர்சாத்து போட்டியிடும் தொகுதிகள்

பெர்சாத்து கட்சி, பெனாகா, பெர்த்தாம், தெலுக் பஹாங், பெர்மாத்தாங் பெராங்கான் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவை நான்கும் அம்னோ வென்ற தொகுதிகளாகும்.

அமான கட்சிக்கு சுங்கை டுவா, பெர்மாத்தாங் பாசிர், பாயான் லெப்பாஸ் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவை மூன்றும் கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிட்ட தொகுதிகளாகும்.

கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் உள்ளிட்ட பக்காத்தான் ராயாட் கூட்டணி பினாங்கில் மொத்தமுள்ள 40 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எஞ்சிய 10 இடங்களை அம்னோ கைப்பற்றியது.

நீண்ட காலமாக கெராக்கான் கட்சியின் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியால் ஆளப்பட்டு வந்த பினாங்கு மாநிலம் முதன் முறையாக 2008 பொதுத் தேர்தலில் ஜசெக தலைமையிலான பக்காத்தான் கூட்டணிக்கு கைமாறியது. 2008 பொதுத் தேர்தலில் 29 தொகுதிகளில் வென்று பக்காத்தான் ஆட்சி அமைத்தது.

இந்த முறை பாஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதால் நிலைமை மாறுமா என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன. எனினும், லிம் குவான் எங்கின் வலுவான தலைமைத்துவத்தால் மீண்டும் பக்காத்தான் கூட்டணியே ஆட்சியில் அமரும் என கணிக்கப்படுகிறது.