கோலாலம்பூர் – கடந்த 3 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும், அல்தான்துயா கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் காவலர் சைருல் அசார் உமாரை, நாடுகடத்தி மலேசியா கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அரசாங்கம் யோசித்து வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
சைருலை நாடு கடத்துவது குறித்து ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் எழுப்பியக் கேள்விக்கு எழுத்துப்பூர்வப் பதிலளித்திருக்கும் சாஹிட் ஹமீடி, “காவலர் சைருல் வழக்கில், கூட்டரசு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருப்பதால், ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த புத்ராஜெயாவுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை”
“எனவே அரசாங்கம் இந்த விவகாரத்தில் தீர்வு காண சிறந்த வழிகளை யோசித்து வருகின்றது” என்று சாஹிட் தனது பதிலில் குறிப்பிட்டிருக்கிறார்.
மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு படுகொலை வழக்கில், காவலர்கள் சைருல் அசார் மற்றும் அசிலா ஹட்ரிக்கு கடந்த 2015-ம் ஆண்டு, ஜனவரி 13-ம் தேதி, கூட்டரசு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்புக்குப் பின்னர், ஆஸ்திரேலியா தப்பிச் சென்ற சைருல், அங்கு பதுங்கியிருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய குடிநுழைவு அதிகாரிகள் சைருலைக் கைது செய்து, வில்லாவுட் குடிநுழைவு தடுப்புக் காவல் மையத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.