Home நாடு “அன்வார் மீது நான் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது” – மனம் மாறும் மகாதீர்

“அன்வார் மீது நான் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது” – மனம் மாறும் மகாதீர்

898
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது 1998-ஆம் ஆண்டில் அப்போதைய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது தான் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது, அது தவறானது என துன் மகாதீர் மனம் வருந்திக் கூறியிருக்கிறார்.

எனினும் அன்வாருக்கு எதிரான ஆதாரங்களைக் காவல் துறையினர்தான் வழங்கினர் என்ற தனது தற்காப்பு வாதத்தில் மகாதீர் இன்னும் உறுதியாக இருக்கிறார்.

சின் சியூ சீன நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மகாதீர் இவ்வாறு கூறியதாக மலேசியாகினி இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“முழுக்க முழுக்க சட்டத்தின் அடிப்படையில் அப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் இப்போது திரும்பிப் பார்க்கும்போது அன்வாருக்கு எதிரான அந்த நடவடிக்கையை நான் எடுத்திருக்கக் கூடாது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் மட்டும் நான் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது என்பதை இப்போது இரண்டாவது முறையாக அதுகுறித்து சிந்திக்கும்போது உணர்கிறேன். அரசியல் ரீதியாக அந்த முடிவை நான் எடுத்திருக்கக் கூடாது. காரணம் அதனால் மக்கள் என்னை வெறுத்தார்கள்” என்றும் மகாதீர் மனம் திருந்தி கூறியிருக்கிறார்.

“ஆனால் என்ன செய்வது? சில சமயங்களில் நமக்கு மாற்று வாய்ப்புகள் இருப்பதில்லை. மக்கள் நம்மை வெறுக்கும் முடிவுகளை நாம் எடுத்துத்தான் ஆக வேண்டும்” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

தற்போது அரசியல் ரீதியாக நஜிப்பை வீழ்த்த மீண்டும் அன்வாருடன் கைகோர்த்திருக்கும் மகாதீர், 1998-இல் தான் எடுத்த முடிவுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அல்ல, மாறாக காவல்துறையினரின் நெருக்குதல்தான் காரணம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.