Home நாடு பக்காத்தான் தேர்தல் அறிக்கையில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்புப் பகுதி

பக்காத்தான் தேர்தல் அறிக்கையில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்புப் பகுதி

2333
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2013 பொதுத் தேர்தலில் அனைத்து மலேசியர்களுக்கும் பொதுவான தேர்தல் அறிக்கை வியூகத்தை வகுத்த பக்காத்தான் ராயாட் கூட்டணி, தற்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியாக உருமாற்றம் பெற்று, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது தேர்தல் அறிக்கையில் இந்திய சமுதாயத்தின் நிலைமையை மேம்படுத்த சிறப்புப் பகுதியை இணைத்துள்ளது.

அந்த சிறப்புப் பகுதி குறித்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் இந்தியத் தலைவர்கள் நேற்று புதன்கிழமை (மார்ச் 14) கூட்டாகக் கோலாலம்பூரில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியிருப்பதோடு, அதுகுறித்த விளக்கங்களையும் பின்வருமாறு வழங்கியுள்ளனர்:

“பக்காத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி) தனது தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கும் நாட்டுக்கும் நலன் பயக்கவல்ல பல்வேறு அம்சங்களை மேம்படுத்த வாக்குறுதிகள் அளித்திருந்தாலும், இந்தியர்களின் இன்றைய இன்னல்களைக் கருத்தில் கொண்டு சில பிரத்தியேக விவகாரங்களிலும் அதன் கடப்பாடுகளைத் துணிச்சலாகத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளதை இங்கே குறிப்பிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்..

#TamilSchoolmychoice

நாட்டின் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்நாட்டின் மேம்பாட்டுக்கு அரும் பாடுபட்டவர்கள் இந்தியர்கள் ஆனால் நீண்ட நாட்களாக அம்னோ-பரிசானால் அவர்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளதை, கவனத்தில் கொண்டு பக்காத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி) இந்தியர்களின் இன்னல்கள் தீர்க்க, தான் கொண்டுள்ள கடப்பாடுகளை இத்தேர்தல் அறிக்கையின் வழி மக்களிடம் சமர்ப்பிக்க விழைகிறது.

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் பெரும்பாலான இந்தியர்கள் கடுமையான ஏழ்மையில் இருப்பதைக் காட்டுகின்றன. இருப்போர்- இல்லாதோர் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.

இந்த இடர்ப்பாடுகளை அம்னோ-பாரிசான் அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு இந்தியப் பங்காளி கட்சிகள் பரிசானின் அரசாங்கத்தில் இருந்தாலும், இந்தியர்களின் இன்னல்களை அரசிடம் எடுத்துரைத்து இந்தியர்களிடமிருந்து ஏழ்மையை ஒழிக்க, ஆவன செய்ய அவை தவறிவிட்டன, அதனால் ஏழ்மை இந்தியர்களுக்குத் தொடர் கதையாகிறது.

இந்நாட்டில் சகல உரிமைகளும் கொண்ட மற்றப் பிரஜைகள் போல் மலேசிய இந்திய வம்சாவளியினரும் வாழ, அவர்களிடம் காட்டப்படும் எல்லா விதப் பாகுபாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும். அவர்களின் தேவைகளும், கோரிக்கைகளும் கண்டிப்பாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் பக்காத்தான் நிறைவேற்றப் போகும் 10 திட்டங்கள்

ஆகையால் நம்பிக்கை கூட்டணியின் அடுத்த ஆட்சியில் மலேசிய இந்திய வம்சாவளியில் தோன்றிய மக்கள் உட்பட அனைவருக்கும் நீதியான, அமைதியான சமத்துவமான தேசத்தை வழங்கச் சித்தம் கொண்டுள்ளது. அப்போராட்டத்தில் இந்தியர் மேம்பாட்டுக்கான தனது கடப்பாட்டினை இவ்வாக்குறுதிகள் மேலும் உறுதிப்படுத்தும்.

மலேசிய இந்திய வழித்தோன்றல்கள், நாட்டில் எதிர் நோக்கும் சவால்கள் மீது அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தைப் பக்காத்தான் ஹராப்பான் உணர்ந்துள்ளது.

மற்ற மலேசியர்களுக்குச் சமமான ஒரு சூழ்நிலையில் வாழ்க்கை சவால்களைச் சந்திக்க முடியாத வண்ணம் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள சமூக-பொருளாதார பாரபட்சங்கள் அமைந்துள்ளன.

ஆனால், அதற்குத் தீர்வுகாணவேண்டிய பொறுப்பிலுள்ள அரசு கண்துடைப்பாக மட்டுமே காரியமாற்றுவதால், இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கப் பக்காத்தான் ஹராப்பான் அரசு சித்தம் கொண்டு எழுந்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கடப்பாட்டின் முதல் அங்கமாக,

1) நாடற்றவர்களாக வகை படுத்தப்பட்டுள்ள மலேசிய இந்தியர்களின் இன்னல்களை 100 ரே நாட்களில் தீர்ப்பதாகும்.

2) நாட்டு வீடமைப்பு கொள்கையில், இந்தியர்களின் வீட்டுடமை தேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் கொள்கைகள் மாற்றம் செய்வது.

• முன்னால் தோட்டப் பாட்டாளிகள் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பி-40 பிரிவைச் சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்களை வாடகையின் வழி வீட்டுக்கு உரிமையாளர்கள் ஆக்குவது.

• தரமான வீடுகளை, நியாயமான விலையில் அவர்கள் பெறுவதையும், ஊதியத்திற்கு ஏற்பக் கடன் வசதிகளை ஏற்படுத்தித் தருவதையும் உறுதி செய்வதாகும்.

3) இந்தியர்கள், முன்னால் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் இடங்களில், மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டங்களில் வருமானத்திற்கு ஏற்ற விலை வீடுகள், மற்றும் குறைந்த விலை வீடுகள் அதிகம் கட்ட வீடமைப்பு நிறுவனங்களை நிர்ப்பந்திக்கும் கட்டுப்பாடுகளை, விதிகளையும் மாநில அரசுகளும், ஊராட்சி மன்றங்களும் அமல்படுத்துவதைப் பக்காத்தான் ஹராப்பான் உறுதி படுத்தும்.

தமிழ்ப் பள்ளிகளின் தரம் உயர்த்துதல் – இடைநிலைப் பள்ளிகளை அமைத்தல்

4) எல்லாத் தமிழ்ப்பள்ளிகளையும் தேசிய மொழிப் பள்ளிகளுக்கு ஈடாகத் தரம் உயர்த்தி, அனைத்தையும் அரசாங்கப் பள்ளிகளாகப் பராமரிக்க உறுதி வழங்குகிறது.

5) அரசாங்கத் தமிழ் இடைநிலைப் பள்ளிகளை நிறுவவும் பக்காத்தான் ஹராப்பான் உறுதி வழங்குகிறது

6) இந்திய மாணவர்களுக்கு அதிகக் கல்வி வாய்ப்புகளை அளிக்கும் வண்ணம், (SBP) எனப்படும் நாடு முழுவதிலுமுள்ள தங்கும் வசதிகளைக் கொண்ட பள்ளிகள்,(MRSM) எனப்படும் மாரா விஞ்ஞானக் கல்லூரிகளில் தோட்டப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு அதிக இடம் ஒதுக்கப் பக்காத்தான் ஹராப்பான் உறுதி வழங்குகிறது.

7) SBP, MRSM எனப்படும் இரண்டுவித கல்வி சாலைகள் தவிரத் தங்கும் விடுதிகளைக் கொண்ட இதர விதப் பள்ளிகளிலும் இந்திய மாணவ- மாணவிகளுக்கு அதிக இடமளிக்கும் வண்ணம் விரிவாக்கப்படவும் பக்காத்தான் ஹராப்பான் உறுதி வழங்குகிறது

8) பக்காத்தான் ஹராப்பான், நாம் நாட்டுக்குக் கொண்டுவரும் அனைத்து மேம்பாடுகளிலும் இந்திய மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றுப் பயனடையும் வண்ணம் தொழில் திறன் தொழில் நுட்ப, வேலைக்கான முன் அனுபவப் பயிற்சிகளும், பட்டறைகளிலும் வாய்ப்புகள் வழங்கி, அவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்யும்.

9) இந்திய இளைஞர்களிடம் வேரூன்றியுள்ள போதைப் பொருள், மது, குண்டர் கும்பல் கலாச்சாரத்தைத் துடைத்தொழித்து, அவர்களை நல்வழிப்படுத்தும் வண்ணம் பக்காத்தான் ஹராப்பான் அரசு சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை வரையும். அதன் வழி இந்திய இளைஞர்கள் மேற்கண்ட தவறான பழக்கங்களிலிருந்து முற்றாக விடுபடுவதை உறுதி செய்யும்.

குறைந்த பட்ச ஊதியம் 1,500 ஆக நிர்ணயம்

10) பக்காத்தான் ஹராப்பான், குறைந்த பட்ச ஊதியமாக ரிங்கிட் 1500-யை அதன் ஆட்சிக்கால முதல் தவணையிலேயே அறிமுகப் படுத்தும். இது மிகக் குறைந்த வருமானத்தைப் பெறும் இந்தியர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

11) பக்காத்தான் ஹராப்பான், எல்லா அரசு சார்ந்த நிறுவனங்கள், நகராட்சி, மாநில மற்றும் மத்திய அரசின் ஏஜென்சிகளிலும் புதிதாகப் பணியமர்த்தப் படுபவர்களில் 10 விழுக்காடு வேலை வாய்ப்புகளை இந்தியர்களுக்கு ஒதுக்க ஆணையிடும்.

12) பொருளாதாரத் துறையில் இந்தியர்கள் போட்டியிடும் ஆற்றலை மேம்படுத்தவும் அவர்களைத் தொழிற்துறைகளில் ஈடுபடுத்தவும் உதவியாக,

• முதல் 10 ஆண்டுகளில் இந்தியர் சமூக, பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு 400 கோடி வெள்ளிக்கான சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.

• இந்த நிதி உடனடியாகச் செயல்பட வசதியாக அதற்குப் பக்காத்தான் ஹராப்பான் அரசின் மானியமாக 100 கோடியை ஒதுக்கீடு செய்யும்,

• எஞ்சியவை அரசாங்கத்தின் துணை நிறுவனங்கள் வழி திரட்டப்படும்.

• இது முழுமையாக இந்தியப் பொருளாதார வல்லுனர்களைக் கொண்டு (SINDA) எனப்படும் சிங்கப்பூர் நிதியமைப்பு நிறுவனத்தை முன் மாதிரியாகக் கொண்டு செயல்படும்.

13) பக்காத்தான் ஹராப்பான் அரசில் இந்துக்களுக்கான அறநிதி வாரியமொன்று பினாங்கு இந்து அறநிதி வாரியத்தைப் போல் அனைத்து மாநிலங்களிலும் நிறுவப் படும். முதல் கட்டமாகச் சிலாங்கூர், கெடா, பேராக், பஹாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மாநிலங்களில் அமைக்கப்படும்.

14) தனித்து வாழும் இந்தியத் தாய்மார்களுக்கான பயிற்சி, பட்டறைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும், அவர்கள் வாழ்வு பொருளாதார மேம்பாடுகானச் சிறப்பு தொழில் பயிற்சிகளை வழங்க முழுநேரப் பயிற்சியாளர்களைக் கொண்ட திட்டங்கள் வகுக்கப்படும்.

15) பக்காத்தான் ஹராப்பான் வீட்டிலிருந்து சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் இந்தியர்களுக்கு, குறிப்பாக மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்குவிப்பு வழங்க மைக்ரோ கிரெடிட் மற்றும் சிறு வாணிகக் கடன் உதவி திட்டங்களையும் கொண்டுள்ளது.

16) பக்காத்தான் ஹராப்பான் அரசாங்க மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பாகுபாடுகள் காட்டப் படுவதைத் தடுக்க (சரிநிகர் வேலை வாய்ப்பு கமிஷன்) என்னும் ஒரு ஆணையத்தை அமைக்கும்.

பெல்டா பாணியில் இந்தியர்களுக்கும் விவசாயத் திட்டங்கள்

17) பக்காத்தான் ஹராப்பான் இந்தியர்களுக்குப் பெல்டா, பெல்கிரா போன்ற நிலத் திட்டங்களில் இணையவும் இதர வகையான விவசாய, கால்நடை வளர்ப்பு திட்டங்களில் ஈடுபடவும் தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகள் மற்றும் நிதியையும் வழங்கும்.

18) பக்காத்தான் ஹராப்பான், இந்தியர்கள் அதிகம் சார்ந்துள்ள தொழில் துறைகளான வாகன போக்குவரத்து, மறுசுழற்சி தொழில்களுக்கான அனுமதி மற்றும் லைசன்ஸ் வழங்குவதை எளிமையாக்கி ஊக்குவிக்கும்.

19) இந்து ஆலயங்கள் கட்ட மற்றும் இடுகாட்டுக்கான நிலங்கள் வழங்குவதில் பக்காத்தான் ஹராப்பான் மிகத் தாராளமாக நடந்து கொள்ளும்.

20) இந்து ஆலயங்கள் மற்றும் இடுகாடுகள் இடம்பெயர வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பக்காத்தான் ஹராப்பான் அது குறித்துச் சம்பந்தப்பட்ட பிரிவு மக்கள் அல்லது நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் வழங்குவதை உறுதிப்படுத்தும்.

தடுப்புக் காவல் மரணங்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள்

21).இந்தியர்களுக்கு சிறைகளில் ஏற்படும் மரணம் குறித்துப் புலன் விசாரணை செய்யவும், போலீசாரின் அத்துமீறல்கள் மற்றும் குற்றச்செயல்களைக் கண்காணிக்க, விசாரணை செய்யச் சுதந்திரமான ஆணையம் அமைக்கப்படும். பக்காத்தான் ஹராப்பான் அரசின் முதல் தவணையிலேயே இது அமைக்கப்படும்.

22) இப்போது அம்னோ-பாரிசான் அரசின் அமைச்சுகள் இந்தியச் சமுகம் எதிர்நோக்கும் ஏழ்மை மற்றும் சமூகச் சீர்கேடுகள் மீது காட்டும் அலட்சியப் போக்குக்கு முடிவுகட்டி, பக்காத்தான் ஹராப்பான் அரசு மேற்கண்ட விவகாரங்கள் மீது சம்பந்தப்பட்ட அமைச்சுகள் உதாரணமாக நகர்ப்புற நல்வாழ்வுத்துறை மற்றும் புறநகர் மேம்பாட்டு அமைச்சு போன்றவைகள் ஆய்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்படும்.

23) பக்காத்தான் ஹராப்பான், நாட்டில் அன்னியத் தொழிலாளர்கள் பயன்பாட்டைக் குறைக்கும். இது உள்நாட்டு தொழிலாளர்களின் தேவையையும் ஊதியத்தையும் உயர்த்தும், இந்தியர்கள் உட்படப் பல உள்நாட்டு தொழிலாளர்களுக்குக் குறைந்தது ரிங்கிட் 1500 ஊதியமாகக் கிடைக்கவும் இது வகைசெய்யும்.

24) இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தோட்டப்புறங்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த இலவச மருத்துவச் சேவைகள் கிடைப்பதைப் பக்காத்தான் ஹராப்பான் அரசு உறுதி செய்யும்.

25) இந்தியச் சமுதாயத்தில் தாய் அல்லது தந்தை எவரேனும் ஒருவரின் சம்மதத்துடன் இளம் வயதினர் மதம் மாறும் இடர்ப்பாடுகள் நடந்து கொண்டே உள்ளது. இதற்கு அமைதியான நல்லிணக்க அடிப்படையில் உடனடி தீர்வுக்கான பக்காத்தான் ஹராப்பான் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.