Home நாடு பகாங், சபாய் சட்டமன்றத்திற்கு மீண்டும் மஇகா-ஜசெக மோதல்

பகாங், சபாய் சட்டமன்றத்திற்கு மீண்டும் மஇகா-ஜசெக மோதல்

1111
0
SHARE
Ad
பகாங் மாநில மாவட்டங்களைக் காட்டும் வரைபடம்

குவாந்தான் – பகாங் மாநிலத்தில் மஇகாவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியான சபாய் தொகுதியில் இந்த முறை ஜசெக மீண்டும் போட்டியிடுகிறது.

மீண்டும் இந்தத் தொகுதி மஇகாவுக்கே ஒதுக்கப்படும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் மஇகா-ஜசெக மோதல் இந்தத் தொகுதியில் அரங்கேறும்.

கடந்த பொதுத் தேர்தலில் 117 வாக்குகள் வித்தியாசத்தில் ஜசெகவின் காமாட்சி துரைராஜூ மஇகா-தேசிய முன்னணியின் வேட்பாளர் டத்தோ ஆர்.குணசேகரனைத் தோற்கடித்து இந்தத் தொகுதியைக் கைப்பற்றினார்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் பக்காத்தான் கூட்டணியின் பகாங் தொகுதிகளுக்கான உடன்பாட்டின்படி சபாய் மீண்டும் ஜசெகவுக்கு ஒதுக்கப்படுகிறது.

பகாங் மாநிலத்தில் பிகேஆர் அதிகமான தொகுதிகளில் போட்டி

பக்காத்தான் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள்

இதற்கிடையில் பிரதமர் நஜிப்பின் சொந்த மாநிலமான பகாங்கில் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளில் பிகேஆர் கட்சி போட்டியிடும். மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 14 தொகுதிகளில் பிகேஆர் கட்சி போட்டியிடுகிறது.

அமான கட்சி 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் மகாதீரின் பெர்சாத்து கட்சி 9 தொகுதிகளிலும், ஜசெக 8 தொகுதிகளிலும் போட்டியிடும். இந்தத் தகவல்களை நேற்று சனிக்கிழமை குவாந்தானில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பக்காத்தான் ஹரப்பான் பகாங் மாநிலத் தலைவரும், இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான பவுசி அப்துல் ரஹ்மான் அறிவித்தார்.

நஜிப்பின் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் பெர்சாத்து 2 தொகுதிகளிலும், பிகேஆர் மற்றும் ஜசெக தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடும்.

தற்போது இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணியே வென்று தன்வசம் வைத்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பகாங் மாநிலத்தில் பாஸ் கட்சி அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை பாஸ் போட்டியிட்ட பெரும்பான்மையான தொகுதிகளில் அமானாவும், பெர்சாத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன.

பகாங் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகள் மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளாக இருப்பதால் இந்தத் தொகுதிகளில் வெல்வதில் பக்காத்தான் கூட்டணி மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 30 சட்டமன்றத் தொகுதிகளையும் ஜசெக 7 தொகுதிகளையும், பாஸ் 3 தொகுதிகளையும், பிகேஆர் 2 தொகுதிகளையும் வென்றன.