கோலாலம்பூர், மார்ச் 27 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி அரசு பெரும் பின்னடைவை சந்திக்க நேரும்போது, பிரதமர் நஜிப் துன் ரசாக் தனக்கு முன் பதவி வகித்த அப்துல்லா அகமட் படாவியைப் போல் பதவி விலக நேரிடும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கு முன், இதே கருத்தை ஏ.எப்.பி என்ற வெளிநாட்டு செய்தி நிறுவனத்திடம் மகாதீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரிடம், ஒருவேளை நஜிப் பதவி விலக நேரிட்டால் அடுத்த பிரதமர் பதவிக்கு யார் தகுதியானவர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்பதவிக்கு தகுதியானவர் என்று தற்போது தான் யாரையும் நினைக்கவில்லை என்றும் தனது கருத்து வெறும் யூக அடிப்படையிலானது என்றும் தெரிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்றம் இன்னும் கலைக்கப்படாதது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மகாதீர், “நாடாளுமன்றம் ஒரு வருடத்திற்கு முன்பாகவே கலைக்கப்படவேண்டும், ஒருவேளை நான் பிரதமராக இருந்தால் ஒரு வருடத்திற்கு முன்பே நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பேன். ஆனால் எனக்கு அதற்கு அதிகாரம் இல்லை. என்னுடைய கணிப்புப் படி, சில சட்டமன்றங்களின் காலம் நிறைவடைந்து தானாகவே கலைவது போல் நாடாளுமன்றமும் தானாகவே கலைந்துவிடும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த நிலை வருவதற்கு முன்பாகவே நஜிப் நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் ஜ.செ.க கட்சின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மகாதீர்,
“பொதுவாக ஜோகூர் மாநிலம் தேசிய முன்னணியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும். ஆனால் இந்தத் தேர்தலில் எதிர் கட்சியினர் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு ஜோகூரில் களமிறங்குகிறார்கள் என்றால், நிச்சயம் அங்கு வாழும் மக்களின் மன நிலையில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.