Home நாடு ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றம் : அம்னோவுக்கு கைமாறினால் சாஹிட் இந்திய வாக்குகளை இழக்கலாம்

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றம் : அம்னோவுக்கு கைமாறினால் சாஹிட் இந்திய வாக்குகளை இழக்கலாம்

1321
0
SHARE
Ad

பாகான் டத்தோ – அண்மைய சில நாட்களாக தமிழ் ஊடகங்களில் அடிக்கடி இடம்பெறும் சட்டமன்றத் தொகுதி ஊத்தான் மெலிந்தாங். பாரம்பரியமாக மஇகா போட்டியிட்டு வந்துள்ள தொகுதி.

இந்தத் தொகுதியை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு வழங்காமல் அம்னோவே எடுத்துக் கொண்டு போட்டியிடப் போகிறது என்பதுதான் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றம் பிரபலமாகி வருவதற்கான காரணம்.

2008, 2013 என இரு பொதுத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதியில் மஇகா தோல்வியையே சந்தித்தது. அதைத் தொடர்ந்து எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோவே இந்தத் தொகுதியில் போட்டியிடும் என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாம்ரி அப்துல் காதிரும், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும் நெருக்குதல்கள் தந்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

ஆனால் இந்த இரு அம்னோ தலைவர்கள் அவ்வாறு முடிவெடுப்பதற்கும் பின்னணியில் சில நியாயங்கள் இருக்கவே செய்கின்றன.

பேராக் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் சாம்ரி

பேராக் மந்திரி பெசார் சாம்ரி அப்துல் காதிர் பேராக் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். இன்றைய நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் தேசிய முன்னணி கடுமையான சவால்களை எதிர்நோக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சாம்ரி அப்துல் காதிர்

இந்த முயற்சியில் சாம்ரி பேராக்கிலுள்ள மொத்தமுள்ள 59 தொகுதிகளில் குறைந்த பட்சம் 30 தொகுதிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். அப்போதுதான் ஒரு தொகுதி பெரும்பான்மையிலாவது தேசிய முன்னணி ஆட்சி அமைக்க முடியும்.

தற்போது 24 தொகுதிகளை பக்காத்தான் கூட்டணியும், 4 தொகுதிகளை பாஸ் கட்சியும், எஞ்சிய 31  தொகுதிகளை தேசிய முன்னணியும் கொண்டிருக்கின்றன.

எனவே 3 தொகுதிகள் பெரும்பான்மையில் ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி தொடர்ந்து பேராக்கைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டும். அதற்காக 2013-இல் தோல்வியுற்ற – மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் மீண்டும் வெல்ல அம்னோ கவனம் செலுத்தி வருகிறது.

அவ்வாறு பார்த்தோமானால், 2013 புள்ளிவிவரங்களின்படி 49 விழுக்காடு மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் அம்னோவே போட்டியிட்டால் மீண்டும் வெல்ல முடியும் என்பது சாம்ரியின் கணக்காக இருக்கலாம். அதனால்தான் பிகேஆர் கட்சியின் கேசவன் சுப்பிரமணியம் 2013-இல், 1,240 வாக்குகளில் வென்ற ஊத்தான் மெலிந்தாங் தொகுதியை இந்த முறை அம்னோ குறிவைத்திருக்கிறது.

ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் – கேசவன் சுப்பிரமணியம்

துணைப் பிரதமரான சாஹிட் ஹாமிடியின் பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் 2 சட்டமன்றத் தொகுதிகளான ருங்குப் மற்றும் ஊத்தான் மெலிந்தாங் தொகுதிகளில் ஒரு தொகுதி எதிர்க்கட்சியின் ஆதிக்கத்தில் இருப்பது, அவருக்கே உறுத்தலாக – அரசியல் இடையூறாக இருக்கிறது என்பதால், அவரும் இங்கே அம்னோ வேட்பாளரை நிறுத்தி மோதிப் பார்த்து விடலாம் எனக் கருதுகிறார்.

ஆனால் சாஹிட்டே கடந்த பொதுத் தேர்தலில் 2,108 வாக்குகள் பெரும்பான்மையில்தான் பாகான் டத்தோ தொகுதியில் வென்றார்.

எனவே, சாம்ரி, சாஹிட் இருவருமே ஒரு முக்கியமான அம்சத்தைக் கவனிக்கத் தவறிவிட்டதுபோல் தெரிகிறது.

ஊத்தான் மெலிந்தாங் 32 விழுக்காடு இந்திய வாக்காளர்களைக் கொண்ட தொகுதி.

இந்தத் தொகுதியை மஇகாவிடம் இருந்து பறித்துக் கொண்டு – அதற்கு சரியான மாற்றுத் தொகுதி கொடுக்காமல் – அம்னோ இங்கு போட்டியிட்டால், பாருங்கள் மஇகாவிற்கும், இந்தியர்களுக்கும் நேர்ந்த இழப்பை என எதிர்க்கட்சி இந்தியத் தலைவர்களே – குறிப்பாக பிகேஆர் வேட்பாளர் கேசவனே தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கக் கூடும்.

இதற்குக் காரணம் சாம்ரியும், சாஹிட்டும்தான் என்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து பாகான் டத்தோ தொகுதியில் கணிசமான இந்திய வாக்குகளை சாஹிட் இழக்கும் அபாயமும் ஏற்படக் கூடும்.

-இரா.முத்தரசன்