வாஷிங்டன் – 50 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மார்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், “தவறு நடந்தது உண்மை தான். இனி அது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காத அளவிற்குப் பாடம் கற்றிருக்கிறோம். கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின் அனைத்து செயலிகளையும் ஃபேஸ்புக் தணிக்கை செய்யும்” என்று மார்க் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு, அமெரிக்கப் பொதுத்தேர்தலில், ஃபேஸ்புக் அளித்தத் தரவுகளின் மூலமாக வாக்காளர்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் வெற்றி பெறச் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இதனையடுத்து, ஃபேஸ்புக் உலக அளவில் சர்ச்சையில் சிக்கி, வர்த்தகத்தில் நஷ்டத்தைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.