புதுடில்லி – 22 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார்.
46 வயது வணிகரான அவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் புதுடில்லி திஹார் சிறையிலிருந்து வெளியேறினார்.
2007-ஆம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் 300 கோடி ரூபாய் மதிப்புடைய முதலீடுகளைப் பெறுவதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த தனது தந்தையின் மூலம் சில சலுகைகளைப் பெற்றுத் தந்தார் என்றும் அதன் காரணமாக கையூட்டு பெற்றார் என்றும் சிபிஐ எனப்படும் இந்தியப் புலனாய்வு துறை கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டியுள்ளது.
தங்களின் புலன் விசாரணைகளில் கார்த்தி சிதம்பரம் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சிபிஐ தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
எனினும் தன்மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து தற்காத்து வருகிறார்.