Home நாடு ஹிண்ட்ராப் துணையோடு கூலிம் பண்டார் பாருவை பக்காத்தான் வெல்ல முடியுமா?

ஹிண்ட்ராப் துணையோடு கூலிம் பண்டார் பாருவை பக்காத்தான் வெல்ல முடியுமா?

820
0
SHARE
Ad

கூலிம் – நாடெங்கும் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களால், பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று கூலிம் பண்டார் பாரு. வடக்கு மாநிலமான கெடாவில் பினாங்கு மாநிலத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட கூலிம் தொழிற்பேட்டை நகரை உள்ளடக்கியத் தொகுதி.

பினாங்கு-கெடா எல்லையைத் தாண்டி வடக்கு நோக்கிச் செல்லும்போது எதிர்ப்படும் கெடா மாநிலத்தின் தென்பகுதியிலுள்ள முதல் நகர்.

ஏராளமான தொழிற்சாலைகளைக் கொண்ட இந்த நகரில் இந்தியர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். சுற்றுப் புறங்களில் இருந்த தோட்டங்கள் மேம்பாடு கண்டதைத் தொடர்ந்து உருவான வீடமைப்புப் பகுதிகளில் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

2013 புள்ளி விவரங்களின்படி, கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் 13 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர்.

அப்துல் அசிஸ் ஷேக் பாட்சிர் – கூலிம் பண்டார் பாரு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்

காலங் காலமாக தேசிய முன்னணியின் கோட்டையாக விளங்கி வந்த கூலிம் பண்டார் பாரு தொகுதியில் 2008-இல் பிகேஆர் கட்சியின் சார்பில் சுல்கிப்ளி நோர்டின் 5,583 வாக்குகள் பெரும்பான்மையில் முதன் முறையாக எதிர்க்கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார்.

இதற்குக் காரணம், 2007 ஹிண்ட்ராப் போராட்டங்களின் மையப்புள்ளியாகத் திகழ்ந்த வட்டாரங்களில் ஒன்று கூலிம். எனவே, 2008 பொதுத் தேர்தலில் இந்தியர்கள் திரண்டு வந்து தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களித்ததைத் தொடர்ந்துதான் அந்தத் தேர்தலில் தேசிய முன்னணி வீழ்ந்தது. கெடா மாநிலத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றும் அளவுக்கு 2008-இல் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது.

ஆனால், தொடர்ந்து 2013-இல் அதே கூலிம் பண்டார் பாரு தொகுதியில் பிகேஆர் கட்சி தோல்வியடைந்தது. அம்னோ-தேசிய முன்னணி சார்பில் இங்கு போட்டியிட்ட அப்துல் அசிஸ் பின் ஷேக் பாட்சிர் (முன்னாள் அம்னோ அமைச்சர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிரின் இளைய சகோதரர்) 1,871 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார்.

“ஹிண்ட்ராப்பால் தோல்வியடைந்தேன்”

இதற்குக் காரணமாக அப்போது சொல்லப்பட்டது ஹிண்ட்ராப் தேசிய முன்னணிக்கு ஆதரவாக இயங்கியதும், அதன் தலைவர் பி.வேதமூர்த்தி பிரதமர் நஜிப்புடன் உடன்பாடு ஒன்றைக் கண்டு, தேசிய முன்னணியின் சார்பில் செனட்டராகவும், துணையமைச்சராகவும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும்தான் என்று கூறப்பட்டது.

கூலிம் ஹிண்ட்ராப்பின் கோட்டை என்பதால் இங்குள்ள ஹிண்ட்ராப் ஆதரவு இந்தியர்கள் மனம் மாறி 2013-இல் தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்ததால்தான் மீண்டும் இந்தத் தொகுதியை தேசிய முன்னணி வெல்ல முடிந்தது என்பது சில அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

இப்போது மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது. 2018 பொதுத் தேர்தலில் துன் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு தனது பகிரங்க ஆதரவை அறிவித்துள்ளது வேதமூர்த்தி தலைமையிலான ஹிண்ட்ராப் இயக்கம்.

இதன் காரணமாக மீண்டும் அரசியல் ஆய்வாளர்களின் கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது கூலிம் பண்டார் பாரு. 2013 பொதுத் தேர்தலில் 5 விழுக்காட்டிற்கும் குறைந்த பெரும்பான்மையில் அரசியல் கட்சிகள் வென்ற சுமார் 50 தொகுதிகளில் கூலிம் பண்டார் பாருவும் ஒன்று.

சைபுடின் நசுத்தியோன் – பிகேஆர் தலைமைச் செயலாளர்

இங்கு 2013-இல் போட்டியிட்ட சைபுடின் நசுத்தியோன் பின் இஸ்மாயில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நசுத்தியோன் கூலிம் பண்டார் பாரு பிகேஆர் தொகுதியின் உதவித் தலைவர் என்பதோடு பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளரும் ஆவார்.

“2013 பொதுத் தேர்தலில் கூலிம் நகரில் நான் கூடுதலாக 900 வாக்குகள் பெற்றேன். ஆனால் புறநகர் பகுதியில், கிராம, தோட்டப் புறங்களில் என்னால் போதிய வாக்குகளைப் பெற முடியவில்லை. அங்கு தேசிய முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது. 2008 பொதுத் தேர்தலில், ஹிண்ட்ராப் ஆதரவால் 60 விழுக்காடு இந்திய வாக்குகளைப் பெற்ற பிகேஆர்-பக்காத்தான் கூட்டணி 2013 பொதுத் தேர்தலில் 42 விழுக்காடு இந்திய வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 18 விழுக்காடு இந்திய வாக்குகள் சரிந்ததும், நான் தோல்வியடைந்ததற்கான காரணங்களுள் ஒன்றாகும். ஆனால் இந்த முறை ஹிண்ட்ராப் பக்காத்தான் கூட்டணியை ஆதரிப்பதால் எனது நிலைமை பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்” என அண்மையில் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் நசுத்தியோன் தெரிவித்திருக்கிறார்.

மகாதீரின் ஆதரவும் உதவுகிறது

கெடா மாநிலத்தின் மண்ணின் மைந்தன் துன் மகாதீர் பக்காத்தான் கூட்டணித் தலைவராகக் களம் காண்பதும் கூலிம் பண்டார் பாரு தொகுதியில் நசுத்தியோனுக்கு ஆதரவான அம்சங்களில் ஒன்றாகத் தற்போது திகழ்கிறது.

68 விழுக்காடு மலாய் வாக்குகளையும் 20 விழுக்காடு சீன வாக்குகளையும் கொண்ட கூலிம் பண்டார் பாரு தொகுதியில், துன் மகாதீரின் வரவு புறநகர் பகுதிகளில் உள்ள மலாய் வாக்காளர்களை ஈர்ப்பதில் பெருமளவில் உதவி வருவதாகவும் நசுத்தியோன் கூறுகிறார்.

கிராமப்புற மலாய் வாக்குகளை மகாதீரின் பெர்சாத்து கட்சியினர் பெருமளவில் ஊடுருவிக் கவர்ந்துள்ளனர் என்றும் நசுத்தியோன் பாராட்டிக் கூறுகிறார்.

இதன் காரணமாகவே, கூலிம் பண்டார் பாரு தொகுதியின் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான பண்டார் பாரு பெர்சாத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அணுகுமுறையும், கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்றத்தை வெல்லும் நசுத்தியோனின் முயற்சிக்குப் பக்கத் துணையாக நிற்கும் எனக் கருதப்படுகிறது.

தற்போது, கூலிம் சட்டமன்றத்தை மசீசவும், பண்டார் பாரு சட்டமன்றத்தை அம்னோவும் தேசிய முன்னணியின் சார்பில் கைப்பற்றி தங்களின் வசம் வைத்திருக்கின்றனர்.

ஹிண்ட்ராப் ஆதரவின் மூலம் இந்திய வாக்குகளும், மகாதீரின் பெர்சாத்து கட்சியின் மூலம் கூடுதல் மலாய் வாக்குகளும் கிடைக்கும் பட்சத்தில் தேசிய முன்னணி தோல்வியடையப் போகும் தொகுதிகளில் ஒன்றாக கூலிம் பண்டார் பாரு அமையலாம்.

-இரா.முத்தரசன்