கோலாலம்பூர் – மலேசியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல், உலக அளவில் தங்களது சிறகை விரிக்கத் தயாராகிவிட்டது.
இதற்காக சவுதி அரேபியா, கத்தார், இந்தியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுடன் கைகோர்த்திருக்கிறது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, கடந்த மார்ச் 27-ம் தேதி, தலைநகரில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்றது.
இதில் மை ஈவண்ட்ஸ் நிர்வாகிகளோடு, தொழில்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒய்ஏஎம் தெங்கு லக்ஷமணா சிலாங்கூர், துங்கு சுலைமான் இப்னி சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கலந்து கொண்டார்.
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம், உலகச் சந்தையில், மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் என்ற அந்தஸ்தில் இருந்து ஒரு படி உயர்ந்து அனைத்துலக அளவிலான வர்த்தக நிறுவனமாகச் புத்துணர்ச்சியோடு செயல்படவிருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரும், குழும தலைமைச் செயல் அதிகாரியுமான ஷாகுல் ஹமீத், “உண்மையில், நாம் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி காட்டுகிறது. நமது வெற்றிகளின் எண்ணிக்கைகளையும், வர்த்தகத்தில் நமது சாதனைகளையும் இந்த நிகழ்ச்சி எடுத்துச் சொல்கிறது. எனவே இந்த நேரத்தில், நமது புதிய பங்காளிகளை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நமது பயணம் மென்மேலும் வெற்றியைத் தேடித் தரும் பயணமாகவும் அமையும் என நம்புகின்றேன்” என்று தெரிவித்தார்.
இந்த புதிய ஒப்பந்தப்படி, மை ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் ஐக்கிய ராஜ்ஜியம், அரபு நாடுகள், இந்தியா மற்றும் மலேசியா என உலக அளவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துகின்றது.
இதனிடையே, மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி கோபி கிருஷ்ணன் கூறுகையில், “இந்தப் புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதில் மிகவும் பெருமையடைகின்றோம். நாங்கள் அடையாளம் கண்டுள்ள சில பிரிவுகளில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவோம் என்பதை உறுதியாகச் சொல்கின்றோம்” என்று தெரிவித்தார்.
மேலும், சவுதி அரேபியாவிலுள்ள மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் காலீட் அல்மாயினா கூறுகையில், “மை ஈவண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. சவுதி அரேபியா தற்போது பொழுதுபோக்குத் துறையில் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றது. எனவே சவுதியால் செயல்படுத்த முடிகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யும் வாய்ப்பை எங்களுக்குக் கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து நைஜீரியாவிலுள்ள மை ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மிபாக்கா அடோக்கி கூறுகையில், “நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பில் 11 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஒரு நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். நைஜீரியாவில் இவர்களது நிகழ்ச்சிகளுக்கு அதிக வியாபாரம் உள்ளது. எனவே அதனை மிகச் சிறப்பாக விளம்பரம் செய்யலாம்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, மலேசியாவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சிறப்பாக இயங்கி வரும் விளையாட்டுகள் மக்கள் தொடர்பு மற்றும் விளம்பர முகமை நிறுவனமான விருது பெற்ற ஷேகினா பிஆர் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் மை ஈவண்ட்ஸ் நிறுவனம் கைகோர்த்திருக்கிறது.
இது குறித்து ஷேக்கினா பிஆர் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி கிறிஸ்டோபர் ராஜ் கூறுகையில், “மை ஈவண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மிகவும் பெருமையடைகின்றோம். இது எங்களது பயணத்தில் புதிய மைல் கல்லாக அமைந்திருக்கின்றது. நாங்கள் இருவரும் மிகுந்த ஒத்துழைப்புடன் இயங்கி, சிறப்பான வளர்ச்சியை அடைவோம்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு மட்டுமின்றி, மை ஈவண்ட்ஸ் நிறுவனம், வேலைவாய்ப்பு ஆலோசனை, வடிவமைப்பு, மேம்பாடு, தகவல் தொடர்பு சேவை, தொழில்நுட்ப சேவை, சமூக ஊடக மேலாண்மை, சந்தைப்படுத்தல் மேலாண்மை, விளம்பரதாரர் மற்றும் கால் சென்டர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் படி, மை ஈவண்ட்ஸ் நிறுவனம் அனைத்துச் சேவைகளிலும் மேம்பாடு அடைய எதிர்பார்ப்பு கொண்டிருப்பதாக அதன் நிறுவனர் ஷாகுல் ஹமீத் தெரிவித்தார்.

மக்கள் சேவையே தங்களின் முதன்மை குறிக்கோள் மற்றும் முன்னுரிமை என்று கூறிய ஷாகுல் ஹமீத், அவர்களை மகிழ்விப்பது தான் தங்களின் லட்சியம் என அங்கு கூடியிருந்தவர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் கூறினார்.
மை ஈவண்ட்ஸ் நிறுவனம், கிங் ஆஃப் கிங்ஸ், ராஜா ஒன் மேன் ஷோ, நட்சத்திரக் கலைவிழா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மலேசியத் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற நிறுவனமாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.