Home நாடு போதை வழக்கில் சிக்கிய தொகுதித் தலைவர் – அதிருப்தியில் அம்னோ தலைமை!

போதை வழக்கில் சிக்கிய தொகுதித் தலைவர் – அதிருப்தியில் அம்னோ தலைமை!

1115
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வேட்பாளராகக் களமிறங்கவிருக்கும் முக்கிய அம்னோ தொகுதித் தலைவர் ஒருவர், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகியிருப்பது அம்னோ தலைமைத்துவத்தை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இதனை இன்று செவ்வாய்க்கிழமை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கும் அம்னோ துணைத் தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி, சம்பந்தப்பட்ட தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

“இது எதிர்பாராத ஒன்று. சட்டப்பூர்வமாகப் பார்த்தால், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஆனால் நியாயப்படியும், அரசியல் பார்வையிலும் பார்த்தால், இது மிகுந்த சோகமானது. அவ்வாறு நடந்திருக்கக்கூடாது” என சாஹிட் இன்று கோல கிராயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இது குறித்து, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைச் சந்தித்துப் பேச விருப்பதாகவும், கட்சி விதிமுறைகளின் படி அந்நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை, ஜாலான் இம்பியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத கேளிக்கை மையம் ஒன்றில் 40 வயதான அந்நபர், போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் அனைவரும் அம்பெத்தாமின் மற்றும் மெத்தாம்பெத்தாமின் வகை போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுதலையாகியிருக்கும் அந்த அம்னோ தலைவர், பல்வேறு அரசு சாரா இயக்கங்களுக்குத் தலைவராக இருப்பதோடு, குறைந்தது ஓர் அரசாங்கத் தொடர்பு நிறுவனத்தின் வாரியக் குழுவில் இடம்பெற்றிருப்பவர் எனக் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.