Home நாடு கிழக்குக்கரை பொருளாதார மண்டலத்தில் சிகாமாட் சேர்த்துக் கொள்ளப்படும் – நஜிப் அறிவிப்பு

கிழக்குக்கரை பொருளாதார மண்டலத்தில் சிகாமாட் சேர்த்துக் கொள்ளப்படும் – நஜிப் அறிவிப்பு

944
0
SHARE
Ad

சிகாமாட் – இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சிகாமாட்டுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கிம்மாஸ்-ஜோகூர் பாரு இடையிலான இரட்டைத் தண்டவாளம் அமைக்கும் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தனது உரையில், கிழக்குக்கரை பொருளாதார மண்டலத்திற்குள் சிகாமாட் வட்டாரமும் இணைத்துக் கொள்ளப்படும் என்றும் இதன் மூலம் சிகாமாட்டில் பொருளாதார முன்னேற்றம் விரைவுபடுத்தப்படும் என்றும் நஜிப் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

பகாங்கிலுள்ள ரொம்பின் வட்டாரம், ஜோகூரின் மெர்சிங் வட்டாரம் ஆகிய பகுதிகளோடு சிகாமாட்டுக்கு இருந்து வரும் அணுக்கமானப் பொருளாதாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்த இணைப்பு முடிவு எடுக்கப்பட்டதாகவும் நஜிப் கூறியிருக்கிறார்.

சிகாமாட்டில் அமைந்துள்ள உள்நில துறைமுகத்தின் மேம்பாட்டுக்காக 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டையும் பிரதமர் அறிவித்தார். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு மேலும் கூடுதலான பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இன்று கட்டுமானம் தொடங்கப்படும் கிம்மாஸ்-ஜோகூர் இரட்டைத் தண்டவாளத் திட்டத்தின் மூலமும் ஜோகூர் மாநிலத்தில், குறிப்பாக சிகாமாட்டில் பொருளாதார மேம்பாடுகள் ஏற்படும் என்றும் நஜிப் தெரிவித்தார்.

கிம்மாஸ்-ஜோகூர் பாரு இரட்டைத் தண்டவாளம் நிறைவடைந்ததும், ஜோகூர் பாருவுக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான பயண நேரம் நான்கே மணி நேரமாக இருக்கும்.

மேலும், மலேசியாவின் தென்பகுதி எல்லை ஜோகூர் பாருவிலிருந்து வட பகுதி எல்லையான பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் எல்லை வரையிலான இரயில் பயண நேரம் 10 மணி நேரத்துக்கும் குறைவானதாக இருக்கும்.