Home தேர்தல்-14 தேர்தல்-14: ஷாபி அப்டால் – பக்காத்தான் கூட்டணி சபா மாநிலத்தைக் கைப்பற்றுமா?

தேர்தல்-14: ஷாபி அப்டால் – பக்காத்தான் கூட்டணி சபா மாநிலத்தைக் கைப்பற்றுமா?

1398
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் அதிரடி அரசியல் நடத்தி வரும் டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலின் வாரிசான் சபா கட்சி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஒன்றைக் கண்டுள்ளது.

இதனை நேற்று திங்கட்கிழமை கோத்தா கினபாலுவில் நடைபெற்ற வாரிசான் கட்சியின் முதலாவது மாநாட்டில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஷாபி அப்டால் அறிவித்தார். ஏறத்தாழ 5,000 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சபா மாநிலத்தில் விறுவிறுவென்று மாறிக் கொண்டிருக்கும் அரசியல் காட்சிகளுக்கிடையே இந்த தொகுதி உடன்பாடு முக்கியமான அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

எனினும் இந்தத் தேர்தல் உடன்பாட்டின்படி யார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பதுபோன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

வழக்கமாக ஜசெகவும், பிகேஆர் கட்சியும் சபா மாநிலத்தில் போட்டியிட்டு சில தொகுதிகளில் தங்களின் வலுவான ஆதரவைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் ஜசெக தனித்துப் போட்டியிட்டு வென்று வந்திருக்கிறது.

60 சட்டமன்றங்கள் – 25 நாடாளுமன்றங்கள்

சபாவில் 60 சட்டமன்றத் தொகுதிகளும், 25 நாடாளுமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன. பெரும்பான்மையான தொகுதிகளில் ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொகுதி உடன்பாட்டின்படி வாரிசான் கட்சியே தலைமைக் கட்சியாகச் செயல்படும். சபா மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தால், ஷாபி அப்டால் மாநிலத்தின் முதல்வராவார்.

எனினும், சபாவின் மற்ற எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்து இந்தக் கூட்டணி உடன்பாடு காணப்பட்டிருப்பதால், சபா மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகக் கருதப்படுகின்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குள்ளாகவோ, அல்லது வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாகவோ, மற்ற சபா மாநில எதிர்க்கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை ஷாபி அப்டால் காண முடியுமா என்பது சந்தேகம்தான்.

சபாவில் பல்வேறு சிறிய எதிர்க்கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அதில் முக்கியமாகப் பார்க்கப்படுவது ஸ்டார் எனப்படும் ஜெப்ரி கித்திங்கானின் கட்சியாகும். ஜெப்ரி முன்னாள் சபா முதல்வர் ஜோசப் பைரின் கித்திங்கானின் இளைய சகோதரராவார். மற்றொரு முக்கிய கட்சி சபாவின் முன்னாள் முதலமைச்சர் யோங் தெக் லீ தலைமையிலான சபா புரொக்ரசிவ் பார்ட்டி எனப்படும் கட்சியாகும்.

பக்காத்தான் ஹரப்பானுடன் தேசிய நிலையிலும் இணைந்து செயல்பட்டு மத்திய அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாகவும் ஷாபி அப்டால் அறிவித்துள்ளார்.

பக்காத்தான் மத்திய அரசாங்கத்தை அமைத்தால் அதில் வாரிசான் கட்சி இடம் பெறும் என்றும் அதே வேளையில், சபா மாநில அரசாங்கத்தை வாரிசான் அமைத்தால், அந்த மாநில அரசாங்கத்தில் பக்காத்தான் கட்சிகளும் இடம் பெறும் என்றும் ஷாபி அறிவித்திருக்கின்றார்.

சபா மும்முனைப் போட்டிகளின் களமாக உருவெடுக்கும்போது, அது தேசிய முன்னணிக்குப் பாதிப்பாக அமையுமா அல்லது பக்காத்தான் கூட்டணிக்கே பாதிப்பாக அமையுமா என்பது பொறுத்திருந்துப் பார்க்க வேண்டிய ஓர் அம்சமாகும்.

வழக்கமாக, சபா மாநிலம் என்பது தேசிய முன்னணியின் பாதுகாப்பான வாக்கு வங்கியாகப் பார்க்கப்பட்டது. தற்போது அந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

ஷாபி அப்டாலின் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி மத்தியில் பக்காத்தான் கூட்டணி அரசாங்கம் அமைக்க உதவி புரியும் என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

-இரா.முத்தரசன்