Home நாடு மின்னலின் இசைக் கொண்டாட்டம்: 3000 நேயர்கள் பங்கேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது!

மின்னலின் இசைக் கொண்டாட்டம்: 3000 நேயர்கள் பங்கேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது!

976
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மின்னல் எப்எம் ஏற்பாட்டில் ஆர்டிஎம்மின் 72-ம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம், கடந்த மார்ச் 31-ம் தேதி, புக்கிட் பெருந்தோங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாலை மணி 5 தொடங்கி, நள்ளிரவு மணி 12 வரை, சுமார் 7 மணி நேரம் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த 72 -ம் ஆண்டு வரலாற்று விழாவில் ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நேயர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#TamilSchoolmychoice

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பட்ட ரசிகர்களை மின்னல் எப்எம் கொண்டுள்ளத்தால் அனைவரையும் கவரும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.

மாலை மணி 4 தொடங்கி நேயர்களுடய வருகை அதிகரித்து கொண்டே இருந்தது. மாலை 5 மணிக்கு வண்ணம் தீட்டும் போட்டி தொடங்கியது.

சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதில் கலந்து கொண்டனர்.10 சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் வந்திருந்தவர்களுக்கு போட்டியங்கம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்களும் பரிசுகள் பெற்றனர்.

இதனிடையே, அரசு நிறுவனங்களின் முகப்பிடங்கள் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்தது.

அதில் டேவான் பஹாசா டான் புஸ்தாகா, போலிடெக்னிக், மை ஸ்கில், அமானா இக்தியார், ஏகேபிகே போன்ற அரசு நிறுவனங்கள் பங்கேற்றன.

பொது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றதோடு அவர்களுக்கு இந்த சேவைகள் நேரடியாகவும் இலவசமாகவும் வழங்கப்பட்டன.

இவ்விழாவின் முக்கிய அங்கமாக கலைநிகழ்ச்சி இரவு 8 மணிக்குத் தொடங்கியது.

எதிர்பார்த்ததை விட நேயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.இந்த எண்ணிக்கை நள்ளிரவு 12-க்குப் பிறகும் குறையாமல் இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

மின்னல் எப்எம் அறிவிப்பாளர்கள் மோகன், திரேசா, தெய்வீகன், சுகன்யா, ஹரி, ரவின் மற்றும் புவனா வீரமோகன் ஆகியோரின்  அறிவிப்புகளோடு உள்ளூர் கலைஞர்கள் ஷாமினி, சித்தார்த்தன், குமரேஷ், நாராயணி, ஷர்மிளா சிவகுரு, காயத்திரி தண்டபாணி, சிவகாந்தன், சைக்கோ யூனிட் ஷீஜே, ரேபிட் மேக், முகேன் ராவ், மில்லேனியம் ஆர்ட்ஸ் குழுவினருடைய படைப்புகள் வந்திருந்தவர்களை வெகுவாக கவர்ந்தன.

டிரான்ஸ்போமர்ஸ், கொரிலா போன்று வேடமிட்டவர்களின் வருகை சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தியதோடு, வந்திருந்தவர்கள் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

நள்ளிரவு 12-க்கு ஆர்டிஎம்மின் 72-ம் நிறைவாண்டை கொண்டாடும் வகையில் பிரத்தியேகமாக செய்யப்பட்ட அனிச்சல் வெட்டப்பட்டு 720 பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது குறித்து மின்னல் எப்எம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகள் ஆர்டிஎம் வளாகத்தில் கொண்டாடப்படும். ஆனால் இந்த முறை மின்னலோடு பயணித்துக் கொண்டிருக்கும் நேயர்களுடன் கொண்டாடியதில் மிகவும் பெருமை கொள்கிறது மின்னல் எப்எம்.தொடர்ந்து மின்னல் எப்எம்மிற்கு அன்பும் ஆதரவும் வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து நேயர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.