கோலாலம்பூர் – உள்நாட்டு அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாண்டுக்கான மெட்ரிக்குலேசன் கல்விக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
எஸ்பிஎம் தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வுக்குப் பதிலாக ஓராண்டுக்கு மெட்ரிகுலேஷன்ஸ் கல்வியை, அரசாங்கத்தின் சிறப்புக் கல்லூரிகளில் தொடரும் வாய்ப்பு ஆண்டுதோறும் 1500 இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 700 இடங்கள் கூடுதலாக உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் இனி 2,200 இடங்கள் வழங்கப்படும்.
பிரதமரின் அறிவிப்புக்கு ம இ கா நன்றி தெரிவித்துக் கொள்வதாக ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு ம இ காவின் தொடர்ச்சியான கோரிக்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் என சுகாதார அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
மெட்ரிக்குலேசன் கல்விக்கான 1,500 இந்திய மாணவர்ளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என ம இ கா நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்ததாக டாக்டர் சுப்ரா சுட்டிக் காட்டினார்.
நேற்று சனிக்கிழமை (7 ஏப்ரல் 2018) கோலாலம்பூர், கெரிஞ்சி குடியிருப்புப் பகுதித் திடலில் பி40 நிலையிலுள்ள இந்திய சமூகத்துக்கான சிறப்பு அமானா சஹாம் முதலீட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தப் போது பிரதமர் மெட்ரிகுலேஷன்ஸ் தொடர்பான அறிவிப்பைச் செய்தார்.
நிகழ்ச்சி நடைபெற்ற கெரிஞ்சி வட்டாரம் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருவதாகும்.
இதன் தொடர்பில் மேலும் கருத்துரைத்த டாக்டர் சுப்ரா, நாட்டில் இதற்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், ஆனால், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் தாம் இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அறிவிப்பதோடு, அமல்படுத்தியும் வருவதாகத் தெரிவித்தார்.