கோலாலம்பூர் – கட்சியைத் தற்காலிக இரத்து செய்தது தொடர்பாக சங்கங்களின் பதிவிலாவுக்கு எதிராக பெர்சாத்து கட்சி தாக்கல் செய்திருந்த வழக்கை, அக்கட்சி இன்று செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.
பெர்சாத்து கட்சியின் திரும்பப் பெறும் மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.நந்தபாலன், அம்மனுவைத் திரும்பப் பெறுவதற்கு அனுமதி வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி, பெர்சாத்துவை தற்காலிக இரத்து செய்த ஆர்ஓஎஸ் (சங்கப்பதிவகம்) முடிவுக்கு எதிராக அக்கட்சி, உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு அளித்தது.
சங்கப் பதிவகச் சட்டம், பிரிவு 14(2)-ன் படி, 14-வது பொதுத்தேர்தலில், போட்டியிடத் தகுதிவாய்ந்த ஒரு கட்சியாகத் தங்களை அனுமதிக்க உத்தரவிடக் கோரி, அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது.
மேலும், ஆர்ஓஎஸ் பொது இயக்குநர் சூரியாத்தி இப்ராகிம், பெர்சாத்துவை இரத்து செய்வதாக தவறாக அறிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பெர்சாத்து கட்சி, அவருக்கு எதிராக சங்கப்பதவகச் சட்டம் பிரிவு 14 (5)-ன் படி அதிகார துஷ்பிரயோகம் செய்தற்காக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இம்மனுவை பெர்சாத்து பொதுச்செயலாளர் ஷாருடின் முகமட் சாலே, ஏப்ரல் 5-ம் தேதி, கோலாலம்பூர் நீதிமன்றத்தில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.