Home நாடு சுங்கை சிப்புட் தொகுதி கேட்கவில்லை – வேள்பாரி விளக்கம்!

சுங்கை சிப்புட் தொகுதி கேட்கவில்லை – வேள்பாரி விளக்கம்!

1094
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தான் கேட்டதாகக் கூறப்படும் தகவலை மஇகா தேசியப் பொருளாளர் எஸ்.வேள்பாரி மறுத்திருக்கிறார்.

மாறாக அத்தொகுதி தனக்குக் கொடுக்கப்பட்டால் என்ன செய்வேன் என்ற கேள்விக்குத் தான் பதிலளித்திருப்பதாகவும் வேள்பாரி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், மஇகா தலைவர்கள் தாங்கள் போட்டியிட நினைக்கும் தொகுதிகள் குறித்து பொதுவாக வேண்டுகோள் விடுப்பதைத் தவிர்க்குமாறு மஇகா தேசியத் தலைவர் டாக்டர் ச.சுப்ரமணியம் அறிக்கை விடுப்பதற்கு அவருக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்றும் வேள்பாரி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நான் அந்தத் தொகுதி கேட்டு வேண்டுகோள் விடுக்கவில்லை. அந்தத் தொகுதி தான் கொடுக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. எனக்கு அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தால் என்ன செய்வேன் என்ற கேள்விக்கு தான் பதிலளித்தேன்.

“ஒருவேளை எனக்குக் கொடுக்கப்பட்டால், பொதுத்தேர்தலில் போட்டியிட நான் தயங்கமாட்டேன்” என்று வேள்பாரி கூறியிருப்பதாக எப்எம்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

எனினும், அனைத்து முடிவுகளும் மஇகா தலைவரின் கைகளில் தான் உள்ளது என்றும் வேள்பாரி தெரிவித்திருக்கிறார்.

“நான் எந்த ஒரு அறிக்கை கொடுப்பதற்கு முன்னும் அவரிடம் தகவல் தெரிவித்துவிடுவேன். அதேவேளையில் என்னிடம் கேட்கப்படும் கேள்விகளையும் அவரிடம் கூறுவேன். எங்களுக்குள் அருமையான உறவு இருக்கிறது. நான் அவரிடம் தான் முதலில் தெளிவுபடுத்துவேன்” என்றும் வேள்பாரி கூறியிருக்கிறார்.

வேள்பாரியின் தந்தையான முன்னாள் மஇகா தேசியத் தலைவர் எஸ்.சாமிவேலு, சுங்கை சிப்புட் தொகுதியில், 1974 முதல் 2008-ம் ஆண்டு வரை, 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மஇகா தலைவர்கள் தொகுதிகள் கேட்டு பொதுவான அறிக்கை விடக்கூடாது என மஇகா தலைவர் எச்சரிக்கை விடுத்திருப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை என்றும் வேள்பாரி கூறியிருக்கிறார்.