Home இந்தியா எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல்: சிஎஸ்கே அணி வெற்றி! போராட்டக்காரர்கள் 780 பேர் கைது!

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல்: சிஎஸ்கே அணி வெற்றி! போராட்டக்காரர்கள் 780 பேர் கைது!

831
0
SHARE
Ad

சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல போராட்டங்களுக்கு இடையில் நடைபெற்று முடிந்தது.

இப்போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டம் வெடித்திருக்கும் வேளையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் நடக்கக்கூடாது என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

#TamilSchoolmychoice

மலை கிராம மக்கள் மைதானத்திற்குள் பாம்புகளை விடப் போவதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்போடு நேற்று இரவு 8 மணியளவில் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

அப்போது, நாம் தமிழர் கட்சியினர், பாரதிராஜா தலைமையிலான திரைத்துறையினர் இன்னும் பல தமிழர் அமைப்புகளும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களோடு போராட்டம் நடத்திய 780 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 8 பேர் காலணி வீசியதால், கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்த பின்னர், போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

அதன் பின்னர், தடைகளின்றி போட்டி நடைபெற்று இறுதியில், சென்னை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 202 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நேற்று கிரிக்கெட் போட்டி நடக்கவிடாமல் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்ட முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட 780 பேரும் இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.