Home நாடு தேர்தல் 14: ஊழியர்களுக்கு விடுமுறையோடு, விமான டிக்கெட் – ஷா ஆலம் நிறுவனம் அசத்தல்!

தேர்தல் 14: ஊழியர்களுக்கு விடுமுறையோடு, விமான டிக்கெட் – ஷா ஆலம் நிறுவனம் அசத்தல்!

1027
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி புதன்கிழமை வருவதால், வெளிமாநிலங்களில் பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகின்றது.

இந்நிலையில், ஷா ஆலமைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, தமது 11 சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மே 7 முதல் 9-ம் தேதி வரையில் 3 நாட்களுக்கு விடுப்பு வழங்குவதோடு, சபா, சரவாக் போய் வர விமான டிக்கெட்டும், செலவுக்கு 300 ரிங்கிட்டும் கொடுப்பதாக அறிவித்து அசத்தியிருக்கிறது.

மார்பில் எம்போரியம் செண்ட்ரியான் பெர்ஹாட் என்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிம் யென் பெங் (வயது 43) கூறுகையில், “வாக்களிப்பது நமது கடமை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், தான் தொழிலாளியாக இருந்த போது சீனப் பெருநாளுக்கும், பொதுத்தேர்தலுக்கும் சொந்த ஊருக்குச் செல்ல விமான டிக்கெட் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டதை நினைவு கூறும் அவர், இப்போது, தான் முதலாளியாக இருக்கும் போது அக்கஷ்டத்தை தனது ஊழியர்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

தன்னைப் போல் மற்ற நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து, விமான டிக்கெட்டுகளையும் வழங்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் சிம் யென் பெங் குறிப்பிட்டிருக்கிறார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் சொந்த ஊருக்குச் செல்ல விமான டிக்கெட்டுகளை வழங்குகிறோம் அல்லவா? அதே போல், பொதுத்தேர்தலின் போது, ஏன் நமது சபா, சரவாக் தொழிலாளர்களுக்கும் வழங்கக் கூடாது? என்றும் சிம் யென் பெங் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சிம் யென் பெங்கின் இந்த உணர்வை ஃபேஸ்புக்கில் பலரும் பாராட்டி வருவதோடு, மார்பில் எம்போரியம் நிறுவனத்தை போல் மற்ற நிறுவனங்களும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.