கோலாலம்பூர் – மைபிபிபி தேசியத் தலைவர் பொறுப்பின் மூலமும், கடந்த காலங்களில் துணையமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளின் வழியாகவும், அனைத்து மலேசியர்களுக்கும் அளப்பரிய சேவைகளையும், பங்களிப்பையும் வழங்கிய மைபிபிபி தேசியத் தலைவரும் மலேசிய போக்குவரத்து அமைச்சுக்கான சிறப்பு ஆலோசகருமான டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அவர்களுக்கு ‘மெய்திரு ஒரே மலேசியர் 2018’ (TRULY 1 MALAYSIAN AWARD 2018) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விமான சேவை பணியாளர், வழக்கறிஞர் ஆகிய பரிணாமங்களுக்குப் பின்னர் அரசியலில் பிரவேசம் கண்ட டான்ஶ்ரீ கேவியஸ், பல்லினமும் பல சமயமும் கொண்ட மலேசியர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கும் நல்லிணக்கத்தை விரிவுப்படுத்துவதற்கும் ஆற்றிய அளப்பரிய சேவைகள் ‘மெரிட்’ அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு 12 வேட்பாளர்களுக்கு இடையில் அவரை இந்த விருதுத் தேர்வுக் குழு வெற்றியாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
விருது ஏற்பாட்டுக் குழுவினரால் நியமிக்கப்பட்ட சுயேச்சைக் குழுவே போட்டியாளர்களையும் வெற்றியாளர்களையும் தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்தது. இந்தத் தொடக்க விருதின் மூலம் பெறப்படும் 50,000.00 ரிங்கிட்டை, சம்பந்தப்பட்ட வெற்றியாளர் அவரின் தேர்வுக்கு ஏற்ப ஏதாவதொரு தொண்டூழியத்திற்குப் பயன்படுத்தலாம்.
லுடியானா ஹோல்டிங்ஸ் சென். பெர். எனப்படும் மறுசுழற்சி ஆற்றல் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டது. மலேசியர்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் தங்கள் நிறுவனத்தின் சமூகக் கடப்பாட்டு திட்டங்களில் ஒன்றாக இதுவும் அமைகிறது.
மலேசியாவில் இன, மத வேறுபாடுகள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கும் ஓர் உறவுப்பாலமாக அயராது உழைப்பதோடு “ஓராங் அஸ்லி” எனப்படும் பூர்வ குடி சமூகத்தின் மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டிருக்கும் கேவியஸ் அவர்களே இந்த விருதுக்குத் தகுதியானவர் என்று லுடியானா ஹோல்டிங்ஸ் சென். பெர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்ஜிட் சிங் கூறினார்.
அனைத்து சமயங்களையும் இனங்களையும் மதிக்கும் தனித்துவம் பெற்றவராக கேவியஸ் வலம் வருகிறார். அதற்குச் சான்றாக தாம் தலைமையேற்றிருக்கும் மைபிபிபி கட்சி பல்லின மக்களைக் கொண்டிருக்கிறது என்றும் மஞ்ஜிட் சிங் கூறியிருக்கிறார்.
மலேசியாவில் உள்ள அனைத்து இனங்களுக்கும் அவர் சம்பந்தப்பட்டவராக இருக்கிறார் என்பது அவர் கலந்து கொள்ளும் ஆலயம், தேவாலயம், குட்வாரா ஆகிய வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டாக அமைகின்றன. இவற்றில், மலாய் திருமண வைபவங்களில் கலந்து கொள்ளும்போது ‘பாஜு மெலாயு’ அணிந்து செல்வது அவரின் தனித்துவத்தை நன்கு எடுத்தியம்புகிறது என்றும் தேர்வுக் குழுவினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
‘ஒரே மலேசியன்’ என்ற உயரிய அங்கீகாரத்திற்கு உகந்தவராக கேவியஸ் அவர்கள் திகழ்வதற்கு அவரின் சிந்தனையில் உதித்த ‘பவர்ட்டி மேட்சிங்’ எனப்படும் உதவி தேவைப்படுபவர்களையும் உதவி வழங்க வருபவர்களையும் ஒன்றிணைக்கும் திட்டம் மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும்.
இனத்திற்கும் மதத்திற்கும் மதிப்பளிக்கத் தவறும் தலைவர்கள் மத்தியில் இந்த அம்சங்களுக்கு முன்னின்று மரியாதை தரும் கேவியஸ் அவர்களை மற்ற தலைவர்களும் உதாரணமாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்றும் மஞ்ஜிட் சிங் புகழாரம் சூட்டினார்.