செபராங் ஜெயா – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றினால், ஜசெக அரசாங்கம் அறிவித்துள்ள 6.34 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் இரத்து செய்யப்படும் என தேசிய முன்னணி அதிரடியாக அறிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (15 ஏப்ரல்) காலை ‘பினாங்கைக் காப்பாற்றுவோம்’ என்ற தலைப்பில் பினாங்கு மாநிலத்திற்கான தேசிய முன்னணியின் பிரத்தியேகத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்தத் தேர்தல் அறிக்கையின்படி, பினாங்கு கடலடிப் பாதைத் திட்டம் இரத்து செய்யப்படும் என்ற அறிவிப்போடு,மலைச் சரிவுகளில் மேற்கொள்ளப்படும் 250 அடிக்கும் கூடுதலான உயரமுடைய கட்டுமானத் திட்டங்களையும்நிறுத்துவோம் எனவும் தேசிய முன்னணி அறிவித்துள்ளது.
பினாங்கு மாநிலத்திலுள்ள வீட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, கூடுதலான 65,000 பொதுமக்கள் வாங்கும் சக்தி கொண்ட வீடுகளும் நிர்மாணிக்கப்படும் என்றும் பினாங்கு மாநில தேசிய முன்னணி அறிவித்திருக்கிறது.
பினாங்கு தேசிய முன்னணி தலைவர் கெராக்கான் கட்சியைச் சேர்ந்த தெங் சாங் இயோவ், பினாங்கு மாநிலத்திற்கான 60 உறுதிமொழிகளோடு கூடிய ஆறு திட்டங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.