Home நாடு மஇகாவுக்கு ஜெலுபு கிடைப்பதில் இறுதி நேர சிக்கல்!

மஇகாவுக்கு ஜெலுபு கிடைப்பதில் இறுதி நேர சிக்கல்!

713
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்துள்ள போர்ட்டிக்சன் நாடாளுமன்றத்திற்குப் (முன்பு தெலுக் கெமாங்) பதிலாக ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற ஏற்பாட்டில் இறுதி நேர சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் மற்றும் உள்ளூர் அம்னோ தலைவர்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, தேசிய முன்னணி தலைமைத்துவம் ஜெலுபுவை மஇகாவுக்கு ஒதுக்கும் முடிவை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், போர்ட்டிக்சனில் அம்னோ மீண்டும் போட்டியிடும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அந்தத் தொகுதியின் அம்னோவினர் உற்சாகத்துடன் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஆனால், எதிர்பார்த்தபடி அந்தத் தொகுதியில் அம்னோவின் சார்பாக டான்ஸ்ரீ முகமட் இசா சமாட் (படம்) நிறுத்தப்படமாட்டார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. அவர் மீது பெல்டா தொடர்பில் எழுப்பப்பட்ட ஊழல் புகார்கள் அவருக்கு எதிராகத் திரும்பலாம் என்ற அச்சத்தில் அவரை மீண்டும் அங்கு போட்டியிட வைக்க தேசிய முன்னணி தலைமைத்துவம் தயங்குவதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், போர்ட்டிக்சனில் மஇகா சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டத்தோ வி.எஸ்.மோகன், தற்போது ஜெரம் பாடாங் சட்டமன்றத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், போர்ட்டிக்சனில் மஇகாவின் பிரச்சாரங்களும் தொய்வடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் போர்ட்டிக்சனுக்குப் பதிலாக மஇகாவுக்கு ஒதுக்கப்படவிருக்கும் தொகுதி எதுவென்று இன்னும் முடிவாகவில்லை என்றும், எனினும் தொடர்ந்து ஜெலுபு தொகுதியையே மஇகாவுக்குப் பெற பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மஇகா வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.