Home நாடு சுங்கை சிப்புட்: பிஎஸ்எம் சின்னத்திலேயே போட்டியிட மைக்கல் ஜெயகுமார் முடிவு

சுங்கை சிப்புட்: பிஎஸ்எம் சின்னத்திலேயே போட்டியிட மைக்கல் ஜெயகுமார் முடிவு

1164
0
SHARE
Ad
மைக்கல் ஜெயகுமார்

சுங்கை சிப்புட்: ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் தகவல்களின்படி சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்) கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட டாக்டர் மைக்கல் ஜெயகுமார் முடிவு செய்துள்ளார்.

இதற்கு முன் வெளிவந்த தகவல்களின்படி, சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள உத்தேசித்து வருவதாக ஜெயகுமார் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பக்காத்தான் வேட்பாளருக்கும், மைக்கல் ஜெயகுமாருக்கும் இடையில் பிரியும் என்பதால், சுங்கை சிப்புட் தொகுதியில் தேசிய முன்னணி வெல்வதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் என்றும், அதனால், அந்தத் தொகுதியை பக்காத்தான் இழப்பதற்கு தான் காரணமாக இருக்க விரும்பவில்லை என்றும் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பிஎஸ்எம் கட்சியின் தலைமைச் செயலாளர் ஏ.சிவராஜன் நேற்று புதன்கிழமை (25 ஏப்ரல் 2018) வெளியிட்ட அறிக்கையில் மைக்கல் ஜெயகுமாரை சுங்கை சிப்புட் தொகுதியில் தோற்கடிக்க பக்காத்தான் கூட்டணிதான் முயற்சி செய்கிறது என்றும் குறை கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் ஏற்கனவே தெரிவித்திருந்த கருத்துகளின்படி, பிகேஆர் சின்னத்தில் பக்காத்தான் வேட்பாளராகப் போட்டியிட முன்வந்தால் ஜெயகுமாரை ஆதரிக்கத் தயார் என பிகேஆர் அறிவித்திருந்தது. ஏற்கனவே 2008, 2013 என இரண்டு பொதுத் தேர்தல்களிலும் ஜெயகுமார் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் சுங்கை சிப்புட்டில் வெற்றி பெற்றார்.

எனினும், இன்றுவரை பிஎஸ்எம் சின்னத்திலேயே போட்டியிட ஜெயகுமார் எண்ணம் கொண்டிருக்கிறார்.

இறுதி வரை நிலைமைகள் மாறாமல், ஜெயகுமார் சுங்கை சிப்புட்டிலேயே  போட்டியிட்டால், அந்தத் தொகுதியில் பல்முனைப் போட்டி நிகழும்.

மஇகா-தேசிய முன்னணி சார்பில் மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி போட்டியிட, பிகேஆர் சார்பில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் போட்டியிடுகிறார்.

பாஸ் கட்சியும் இங்கே போட்டியிட உத்தேசித்துள்ளது.

எனவே, இங்கே நான்கு முனைப் போட்டி உருவாகும் பட்சத்தில் தேசிய முன்னணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காரணம், கடந்த 2013 பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட்டில் போட்டியிட்ட தேவமணி 2,793 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி கண்டார்.