சென்னை – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய எம்.எஸ்.ராஜேஸ்வரி (வயது 87) கடந்த ஏப்ரல் 25-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
‘குழந்தைக் குரல் பாடகி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எம்.எஸ்.ராஜேஸ்வரி, டவுன்பஸ் படத்தில் வரும் ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?”,’பொன்னான வாழ்வே’, ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் பாடும், ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ உள்ளிட்ட காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர். ‘அம்மாவும் நீயே’ பாடலை கமலே பாடியது போல் தோன்றும் அளவிற்கு குழந்தைக் குரலாகவே பாடியிருப்பார் எம்.எஸ்.ராஜேஸ்வரி.
1950-ல் தொடங்கி 1970 வரை தனது உருகவைக்கும் குரலால் ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தி வந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி, அதன் பின்னர் சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளிவந்த ‘நாயகன்’ படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ என்ற பாடலை ஜமுனா ராணியுடன் இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எம்.எஸ்.ராஜேஸ்வரியின் மறைவை அறிந்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
”களத்தூர் கமலை மக்களுக்குக்கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே என்ற பாடலும்தான். அதைப்பாடிய அம்மையார் எம்.எஸ்.ராஜேஸ்வரி நம்மை விட்டு அகன்றார். அவர் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என கமல் தெரிவித்திருக்கிறார்.