Home தேர்தல்-14 ஊத்தான் மெலிந்தாங்: பறிக்கப்பட்டதால், சாஹிட் இந்திய வாக்குகளை இழக்கிறார்!

ஊத்தான் மெலிந்தாங்: பறிக்கப்பட்டதால், சாஹிட் இந்திய வாக்குகளை இழக்கிறார்!

1210
0
SHARE
Ad

ஊத்தான் மெலிந்தாங் – மிகப் பெரிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான கடுமையான போட்டிகளுக்கிடையில் பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோ நாடாளுமன்றத்தின் கீழ் வரும் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றம், கடந்த சில நாட்களாக நாடு தழுவிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பாரம்பரியமாக மஇகா போட்டியிட்டு வந்துள்ள ஊத்தான் மெலிந்தாங் தொகுதி இந்த முறை மஇகாவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக, ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது.

பாகான் டத்தோவில் போட்டியிடும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியின் நெருக்குதலால்தான் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியை அம்னோவுக்கு மஇகா விட்டுக் கொடுத்தது என்பது பாகான் டத்தோ முழுவதும் தற்போது இந்திய வாக்காளர்களால் பேசப்படுகிறது.

மஇகா தோல்வியடைந்ததால் அம்னோ எடுத்துக் கொண்ட தொகுதி

#TamilSchoolmychoice

2008, 2013 என இரு பொதுத் தேர்தல்களிலும் மஇகா, ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் தோல்வியடைந்தது. இரண்டு தடவைகளிலும், பிகேஆர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.கேசவன் (படம்) அமோக வெற்றி பெற்றார்.

பாகான் டத்தோ தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகள் ஊத்தான் மெலிந்தாங் மற்றும் ருங்குப் ஆகும். ருங்குப் தொகுதியை குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது அம்னோ வென்று வந்திருக்கிறது. ஆனால், ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் தொடர்ந்து மஇகா தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.

தனது நாடாளுமன்றத் தொகுதியிலேயே,  பிகேஆர் வேட்பாளர் சட்டமன்ற வேட்பாளராக வென்று வருவது சாஹிட்டுக்கு பெரிய உறுத்தலாக இருந்தது வந்தது.

இதன் காரணமாகவே, மஇகா வேட்பாளருக்குப் பதிலாக அம்னோ வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தனது நாடாளுமன்றத் தொகுதி, அதன் கீழ் வரும் சட்டமன்றங்கள் அனைத்தையும் தனது  கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம் என சாஹிட் வகுத்த திட்டம் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் மீண்டும் தேசிய முன்னணி தோல்வியடையும் என்ற நிலைமையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதே வேளையில், பேராக் மாநிலத்தை தேசிய முன்னணிக்காக மீண்டும் கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் பேராக் மந்திரி பெசார் சாம்ரி அப்துல் காதிர் (படம்), ஊத்தான் மெலிந்தாங் தொகுதியை அம்னோ வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைப்பதன் மூலம், கைப்பற்ற முடியும் எனத் திட்டமிட்டார். அதன் மூலம் பேராக் மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தனது வியூகமும் நிறைவேறும் என நினைத்தார்.

காப்பார் மணிவண்ணனின் வரவு

ஆனால், பிகேஆர் கட்சி, கேசவனை சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான மணிவண்ணனை ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்திற்கான வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

வழக்கறிஞர், சிறந்த பேச்சாளர், 5 வருடங்களாக காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பின்னணியைக் கொண்ட மணிவண்ணன் வலுவான வேட்பாளராகவும், ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் ஊத்தான் மெலிந்தாங் இந்திய வாக்காளர்களை கவரக் கூடிய ஈர்ப்பு சக்தி கொண்டவராகவும் திகழ்கிறார்.

இதன் மூலம் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையினர் – தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் கூட – வெறுப்பினால், அம்னோ வேட்பாளருக்கு வாக்களிக்காமல், பிகேஆர் கட்சியின் மணிவண்ணனுக்கு வாக்களிப்பர் என்ற கருத்து ஊத்தான் மெலிந்தாங்கில் நிலவுகிறது.

பிகேஆர் கட்சிக்கான மலாய் ஆதரவு வாக்குகள் மற்றும் சீன வாக்குகளும் இணையும்போது மணிவண்ணன் ஊத்தான் மெலிந்தாங்கில் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.மணிவண்ணன்

அதுமட்டுமல்ல! ஊத்தான் மெலிந்தாங் பிரச்சனையால், சாஹிட்டுக்குக் கிடைக்கக் கூடிய இந்திய வாக்குகளையும் அவர் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊத்தான் மெலிந்தாங் உள்ளூர் வாக்காளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

2 ஆயிரம் வாக்குகளிலேயே சாஹிட் வெற்றி பெற்ற தொகுதி

1995 முதல், பல தவணைகளாக, பாகான் டத்தோ தொகுதியை சாஹிட் ஹமிடி வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருந்தாலும் கடந்த 2013 பொதுத் தேர்தலில் 2108 வாக்குகள் பெரும்பான்மையில்தான் அவரால் பாகான் டத்தோவைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

இந்த முறை பாஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடும் என்பதால் மலாய் வாக்குகள் பிளவுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ் ஆதரவு மலாய் வாக்குகள், பக்காத்தான் பக்கமும் சாயலாம், தேசிய முன்னணி பக்கமும் சாயலாம் என்ற சூழல் நிலவும் பட்சத்தில், இந்திய வாக்குகள்தான் சாஹிட்டின் வெற்றியையும், ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் வெற்றியையும் நிர்ணயிக்கப் போகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஊடகங்களின் புள்ளிவிவரங்களின்படி, ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்தில் 8,700-க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். ஊத்தான் மெலிந்தாங் மொத்த வாக்காளர்களில் இவர்கள் ஏறத்தாழ 30 விழுக்காடு இருப்பர்.

பாகான் டத்தோ – 2013 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

ருங்குப் சட்டமன்றத்தில் 1,300-க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த இரு சட்டமன்றத் தொகுதிகளையும் இணைத்தால், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட – அதாவது சுமார் 21 விழுக்காடு இந்திய வாக்காளர்களை –  பாகான் டத்தோ நாடாளுமன்றம் கொண்டிருக்கிறது.

ஊத்தான் மெலிந்தாங் தொகுதியை மஇகாவுக்கே கொடுத்திருந்தால், ஒருவேளை மஇகா மீண்டும் தோற்றிருக்கலாம். ஆனால், அந்த சுமுகமான சூழலால் சாஹிட் மீண்டும் இந்திய வாக்காளர்களின் அபிமானத்தைப் பெற்று நாடாளுமன்றத் தொகுதியில் வென்றிருப்பார்.

ஆனால், ஊத்தான் மெலிந்தாங்கைப் பிடுங்கி, அம்னோவுக்கு கொடுத்ததால், இப்போது இந்திய வாக்குகளை இழந்து அம்னோவும் இங்கே தோல்வி காணப் போகிறது என்பதோடு, அதன் பாதிப்பால் சாஹிட்டும் பாகான் டத்தோவில் தோல்வியடையும் அபாயம் நேரலாம் என சில உள்ளூர் வாக்காளர்கள் கருதுகின்றனர்.

இந்த அச்சம் காரணமாகத்தான், சாஹிட் பாகான் டத்தோ இந்தியர்களுக்கென பிரத்தியேக தேர்தல் உறுதிமொழிகளை வழங்கியிருக்கிறார். தனது துணைப் பிரதமர் அலுவலகத்தில் இந்தியர் பிரதிநிதி ஒருவர் இருப்பார் என அறிவித்திருக்கிறார்.

அத்தகைய தேர்தல் உறுதிமொழி அறிவிப்புகளில் ஒன்றுதான், இந்தியர்களின் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளை அவரே ஏற்றுக் கொள்வார் என்ற அறிவிப்பு.

ஆனால் அந்த அறிவிப்பின் நோக்கமும், தாக்கமும் திசை மாறி இப்போது அவருக்கு எதிராகவே மாறிவிட்டது என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டிய இன்னொரு அத்தியாயம்!

-இரா.முத்தரசன்