Home தேர்தல்-14 மகாதீர் கடிதத்தின் எதிரொலி: வாக்களிப்பு குறித்து கடற்படைத் தளபதி முக்கிய அறிவிப்பு!

மகாதீர் கடிதத்தின் எதிரொலி: வாக்களிப்பு குறித்து கடற்படைத் தளபதி முக்கிய அறிவிப்பு!

1997
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வரும் மே 9-ம் தேதி நடைபெறும் 14-வது பொதுத்தேர்தலில், காவல்துறையினரும், இராணுவத்தினரும் அவர்கள் விரும்பும் அணிக்கு வாக்களிக்கும் முழு சுதந்திரத்தை, காவல்துறைத் தலைவர்களும், இராணுவத் தலைவர்களும் வழங்க வேண்டுமென பக்காத்தான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று புதன்கிழமை கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

“ஜெனரல்களும், கமாண்டர்களும் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை எந்த ஒரு தடையும் விதிக்காமல் அவர்களுக்குப் பிடித்த கட்சிகளுக்கு வாக்களிக்கும் முழு சுதந்திரத்தை வழங்குவார்கள் என நான் நம்புகிறேன். அவர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும். மாறாக, எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என எச்சரிக்கக் கூடாது” என மகாதீர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அக்கடிதத்தின் எதிரொலியாக, மலேசியக் கடற்படைத் தளபதி அட்மிரல் டான்ஸ்ரீ கமாருல்ஜமான் அஹ்மட் படாருடின் இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வாக்களிக்கும் போது நமக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. நமது முடிவை பாதிக்கும் எந்த ஒரு தூண்டு சக்தியையும் அனுமதிக்காதீர்கள். உண்மை, கவனிப்பு, சாதனைகள் மற்றும் சுய அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களது ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.
“பொறுப்புள்ள மலேசியர்களாக, புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள். நமது வாக்கு இரகசியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என கமாருல்ஜமான் குறிப்பிட்டிருக்கிறார்.
எனினும், கடற்படையைச் சேர்ந்தவர்கள் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.