புத்ரா ஜெயா – துன் மகாதீர் தன் கைப்பட பார்த்துப் பார்த்து, அணு அணுவாகத் திட்டமிட்டுச் செதுக்கியத் திட்டம் புத்ரா ஜெயா. நாட்டின் அரசாங்கத் தலைநகர்.
கடந்த வியாழக்கிழமை (3 மே) தான் அதிகாரபூர்வமாக வாழ்ந்த, எண்ணிலடங்கா முறை கடந்து சென்ற புத்ரா ஜெயா நகருக்கு ஒரு வித்தியாச நோக்கத்தோடு காலடி வைத்தார் மகாதீர்.
“பக்காத்தான் கூட்டணித் தலைவரான என்னை, நான் உருவாக்கிய புத்ரா ஜெயாவில் மீண்டும் பிரதமராக அமர வையுங்கள்” என்ற பிரச்சார முழக்கத்துடன் புத்ரா ஜெயாவுக்குள் நுழைந்த மகாதீருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும், அவரது உரையைக் கேட்கத் திரண்ட கூட்டமும் நாட்டையே அதிர வைத்திருக்கிறது.
அவருடன் பாஸ் கட்சியின் மறைந்த ஆன்மீகத் தலைவர் – கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் நிக் அசிசின் மகன் நிக் ஒமாரும் புத்ரா ஜெயா பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கிளந்தான் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக அமனா கட்சியின் சார்பில், செம்பாக்கா சட்டமன்றத் தொகுதியில் நிக் ஒமார் போட்டியிடுகிறார்.
பெரும்பாலும், அரசாங்க ஊழியர்களை வாக்காளர்களாகக் கொண்ட புத்ரா ஜெயா தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் போட்டியிடுகிறார்.
NEGERI | W.P. PUTRAJAYA |
---|---|
Parlimen | P.125 – PUTRAJAYA |
NAMA PADA KERTAS UNDI | PARTI |
TENGKU ADNAN BIN TENGKU MANSOR | BN |
HJ ZAINAL ABIDIN KIDAM | PAS |
SAMSU ADABI BIN MAMAT | PKR |
புத்ரா ஜெயாவில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. பக்காத்தான் வேட்பாளராக சாம்சு அடாபி பின் மாமாட் போட்டியிட, பாஸ் கட்சியின் சார்பில் ஹாஜி ஜைனால் அபிடின் கிடாம் போட்டியிடுகிறார்.
மகாதீரின் உரையைக் கேட்க திரண்ட கூட்டம் அவரைப் பார்ப்பதற்கும், அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்பதற்கும் திரண்ட கூட்டமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், பக்காத்தான் கூட்டணியின் புதிய வரவான நிக் அசிசின் மகன் எப்படி இருப்பார், எப்படிப் பேசுவார் என்பதைக் கேட்கத் திரண்ட கூட்டமாகவும் இருக்கலாம் என்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.
புத்ரா ஜெயாவின் அரசாங்க ஊழியர்கள் துணிந்து பக்காத்தானுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பது இன்னும் விவாதமாகவே இருந்து வருகிறது.
இருப்பினும், மகாதீருக்கு புத்ரா ஜெயாவில் திரண்ட கூட்டம் தேசிய முன்னணி கோட்டையில் கலக்கத்தையும், கொஞ்சம் ஆட்டத்தையும் ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.
மகாதீருக்குத் திரண்ட கூட்டத்தினரின் வாக்குகளும் அவரது பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக விழுமா என்பது மே 9-ஆம் தேதிதான் தெரிய வரும்!