டோக்கியோ, மார்ச் 28- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் (படம்), ஜப்பான் சென்றுள்ளார்.
அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் அவர், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமான மும்பையில், சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ.4,067 கோடியும், இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.12,528 கோடியும் கடனுதவி அளிக்க ஜப்பான் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சல்மான் குர்ஷித் அளித்த பேட்டியில், ‘‘ஜப்பானின் இந்த கடனுதவியால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். ஏற்கனவே ஜப்பான் கடனுதவியால் நிறைவேற்றப்பட்ட டெல்லி ‘மெட்ரோ ரயில்’ திட்டத்தால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்’’ என்றார்.